செய்திகள்

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி மையங்களில் முன்னுரிமை

சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூலை 17–

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் , மற்றும் காசநோய் பாதித்த நபர்களுக்கு மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட இணைய நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்துடன் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 20,54,363 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,62,200 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 28,16,563 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தற்பொழுது கொரோனா தொற்றிலிருந்து கர்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாநகராட்சி பகுகளில் கர்பிணி தாய்மார்களுக்கு 733 தடுப்பூசிகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 2328 தடுப்பூசிகளும் மற்றும் காசநோய் பாதித்த நபர்களுக்கு 143 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து கர்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் வரிசையில் காத்திருக்காமல் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கர்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *