சிறுகதை

கரம் சிரம் புறம் நீட்டாதீர் | ராஜா செல்லமுத்து

Spread the love

கண்ணில் ரத்தம் ஒழுக ஒழுக மாணிக்கத்தைக் கூட்டி வந்தனர்.

‘‘ரொம்ப பலமான காயமா இருக்குமோ..?

இருக்கும் . ரத்தம் வர்றத பாத்தா… அப்பிடித்தானிருக்கு. கண்ணுல இவ்வளவு பெரிய காயம் எப்பிடி ஏற்பட்டுச்சு. சண்டை எதுவும் போட்டாரா..?’’ என்று மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்டார் ராமசாமி .

‘‘ஐய்யயோ நம்ம மாணிக்கம் வாயில்லா பூச்சிங்க. வாயத் திறந்த பேசுறதே அபூர்வம் . அப்படிப்பட்ட ஆளு போயி எங்க சண்ட போடப்போறாரு. வேற ஏதாவது இருக்கும். ரோட்டுல ரத்தத்தோட வந்தாரு. அவ்வளவு தான் தெரியும். மத்தபடி என்ன நடந்துச்சுன்னு அவரக் கேட்டாதான் தெரியும்’’ என்று இன்னொருவர் சொல்ல ….

‘‘இப்ப இதப்பத்தி பேசி எந்த பிரயோசனமும் இல்ல. மொதல்ல அவரு கண்ணுக்கு என்னன்னு கேளுங்க. அதுக்கப்பறம் மத்தத விலா வாரியா பேசலாம்’’ என்று இன்னொருவர் சொல்ல…

ராமசாமி முதற்கொண்டு சில பேர் மாணிக்கத்தைக் கைத் தாங்லாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.

இரண்டு கண்களையும் இறுகப்பிடித்திருந்த மாணிக்கத்திடம் ,

‘‘என்னப்பா வலிக்குதா…? என்று ராமசாமி கேட்க

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினார்.

இவ்வளவு காயம் ஏற்படுற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தே. தடுத்து நிறுத்த வேண்டியது தான என்றதற்கும்

’’இல்ல’’ என்றே தலையாட்டினார் மாணிக்கம்.

‘‘சரி..சரி.. பேசிட்டே இருக்காதீங்க. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போங்க’’ என்று ஆட்கள் சொல்ல…

அருகிலிருந்த மருத்துவமனைக்குள் கூட்டிச் செல்லப்படார் மாணிக்கம்

‘‘மத்த ஆளெல்லாம் வெளிய நில்லுங்க . பேஸண்ட் மட்டும் உள்ள வாங்க..’’ என்று ஒரு நர்ஸ் சொல்ல…

மாணிக்கம் மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

கண்களை இறுகப் பிடிந்திருந்த மாணிக்கத்தின் கைகளை எடுத்து விட்ட செவிலித்தாய்.

‘‘ என்னங்க அவ்வளவு ஆழமான காயமா இருக்கு. யார் கூடவும் சண்டை ஏதும் போட்டீங்களா…? யாரோ கம்பு வச்சு அடிச்சது மாதிரி இருக்கே..’’ என்று சொல்லிக் கொண்டே முதலுதவி செய்ய ஆயத்தமானார்.

முதல்ல ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் கண்களில் பஞ்சை ஒத்தி ரத்தத்தை துடைத்து எடுத்தனர். இரண்டு கண்களில் இடது கண்ணில் மட்டும் ஆழமான காயம் இருந்தது.

‘‘ யப்பா…. இன்னும் கொஞ்சம் தள்ளப்பட்டிருந்தால்…. அவ்வளவுதான் ஒங்களோட எடது கண்ணு. வெளிய வந்து விழுந்திருக்கும். எந்த சாமி புண்ணியமோ இதோட போயிருச்சு. இல்ல பிரச்சினை பெருசாயிருக்கும்.

ம்… டாக்டர் வருவாரு. கட்டுப்போட்டு மருந்து குடுத்தா கொஞ்சம் தேவலையாகும்’’ என்று நர்ஸ் சொல்ல

மாணிக்கம் அழுதுவிடுவது போலவே இருந்தார் .

‘‘சார் அழாதீங்க …இப்ப நீங்க அழுதா அவ்வளவு தான் கண்ணில இருக்கிற காயத்தில தண்ணிபட்டுச்சுன்னா கஷ்டம் உங்களுக்கு தான்’’ என்று ஒரு நர்ஸ் சொல்ல….

வந்த அழுகையை அப்படியே நிறுத்திக்கொண்டார் மாணிக்கம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவர் வந்தார்.

‘‘ இவருக்கு தான் பிரச்சினையா..?

‘‘ஆமா’’ என்று நர்ஸ் சொல்ல மருத்துவம் செய்வதிலேயே மருத்துவர் கவனம் செலுத்தினாரே யொழிய தவறியும் மாணிகத்திடம் எதுவும் கேட்க வில்லை.

‘‘பரவாயில்ல காயம் பட்டது பட்டுரிச்சு. கண்ணுக்கு எதுவும் பெரிய சேதமில்லை. கொஞ்சம் தள்ளிப்பட்டுருந்தா அவ்வளவுதான் உங்க இடது கண்ண இந்நேரம் நீங்க எழந்திருக்க வேண்டியது தான்’’ என்ற மருத்துவர் காயம்பட்ட கண்ணிற்கு மருத்துவம் செய்துவிட்டு மருத்துவ அறையை விடடு வெளியேறினார்.

இடது கண்ணில் பெரிய கட்டு மட்டுமே போடப்பட்ட நிலையில் உட்கார்ந்திருந்தார் மாணிக்கம்.

‘‘நல்ல வேளை தப்பிச்சிட்டீங்க. இனியாவது பாத்து நடந்துக்கங்க. இன்னொரு தடவ இந்த மாதிரி நடந்துச்சுன்னா உங்க கண்ண மட்டுமில்ல உங்க உசுரக்கூட காப்பாத்த முடியாது ’’என்று சொன்னாள் நர்ஸ்.

படபடவென மாணிக்கம் இருக்கும் அறைக்குள் நுழைந்தனர் நண்பர்கள். செய்தி கேட்டு மாணிக்கத்தின் உறவினர்களும் உள்ளே நுழைந்தனர்.

‘‘அப்பா என்னாச்சு யார் கூடவும் சண்டை ஏதும் போட்டீங்களே…? என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லுங்க எனறு கேட்கவும்

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல பஸ்ல போகும் போது ஜன்னலோரமா ஒக்கான்திட்டு போயிட்டு இருந்தேன். உட்கார்ந்திருந்த நான் அப்பிடியே திடீர்ன்னு தூங்கிட்டேன் . அப்பதான் ரோட்டுல இருந்த மரங்கள் படபடன்னு அடிச்சிட்டே வந்துச்சு . ஒரு கட்டத்தில பட்ன்னு என முகத்தில அடிச்சுச்சு. ஐய்யோன்னு கத்தினேன். அதுக்குள்ள குபு குபு ன்னு கண்ணுல இருந்து ரத்தம் ஒழுக ஆரம்பிச்சுச்சு.

வர்ற ரத்தத்த பாத்து யாராவது வருத்தப்பட்டாங்களா?

ம்ஹூக்கும். அதுக்கு எதிரா ஜன்னலுக்கு வெளிய ஏன்தலைய நீட்டுனன்னு என்னைய தப்பாதான் சொன்னாங்களேயொழிய ஒருத்தர் கூட எனக்காக வருத்தப்படல. இவங்ககிட்ட பேசிட்டு இருந்தோம்னா நம்ம கண்ண எழந்திர வேண்டியதுதான்னு நினைச்சிட்டு அங்க இருந்து ஓடி வந்திட்டேன்’’

‘‘அட…. அப்ப பஸ்ல போகும் போது தான் உங்க கண்ணுல காயம் ஏற்பட்டுச்சா..?

‘‘ஆமா’’ என்று தலையாட்டினார் மாணிக்கம் .

கண்ணில் கட்டோடு உட்கார்ந்திருந்தார் மாணிக்கம்

சர்.. சர்.. என்று சாலைகளில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.

அவை மரம் செடி கொடிகளை உரசியே சென்று கொண்டிருந்தன. மரம் செடி கொடிகளிடமிருந்து தப்பிக்க ஜன்னலோர பயணிகள் சற்ற ஓரம் ஒதுங்கி உட்கார்ந்தனர்.

எல்லைகளைத் தாண்டும் எதுவும் எச்சரிக்கப்பட வேண்டியதே.

கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று பஸ்சில் எழுதியிருந்த வாசகத்தை மதிக்காமல் பஸ் சன்னலோரம் கம்பியில் தலை வைத்து தூங்கி வழியும் பயணிகளும் கைகளை வெளியே நீட்டுபவர்களும் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *