சிறுகதை

கண்டக்டர் சீட்டு… | ராஜா செல்லமுத்து

கூட்டம் பிதுங்கி வழியும் ஒரு பேருந்தில் இன்னும் இன்னும் என ஆட்கள் ஏற ஆரம்பித்தனர்.

யோவ், இது தான் கடைசி பஸ்ஸா?

ஏய்யா, இப்பிடி கூட்டமான பஸ்ல ஏறுறீங்க, கூட்டத்தில ஏற வேண்டியது, அப்பெறம் அதக் காணாம். இதக்காணோம்னு அழ வேண்டியது, அடுத்த பஸ்ல வாங்கய்யா’ என்று பஸ்சிலிருந்த ஒருவர் கத்த, அதை யாரும் கண்டு கொள்ளாமலே ஏறிய வண்ணம் இருந்தனர்.

மேலும் மேலும் என்று ஏறிய பேருந்து, ஒரு பக்கமாய் சாய ஆரம்பித்தது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைப் போல வெளித்தள்ளியது.

நசநசவென வியர்வை நீரில் தொப்பல் தொப்பலாய் நனைந்து மிதந்தது, மொத்தப் பேருந்தும்.

டிக்கெட்…டிக்கெட்.. என்ற கண்டக்டர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே கூவிக் கொண்டிருந்தார்.

‘ஏங்க, தேனாம்பேட்டை ஒரு டிக்கெட் பாஸ் பண்ணுங்க’

யாரும் வாய் திறக்காமலே இருந்தனர்.

‘ஏங்க ஒரு தேனாம்பேட்டை’

‘ஏய்யா, ஒன்னோட டிக்கெட்ட நீ தான் எடுக்கணும். அதுக்கு என்னைய ஏறிட்டு இருக்க’

ஏய்யா, ஒரு டிக்கட்ட பாஸ் பண்றதுக்கு இவ்வளவு சலிப்பா?

‘ஏன், ஒன்னோட டிக்கெட்ட நீ தான் எடுக்கணும். நானென்ன கண்டக்டர் வேலையா பாத்திட்டு இருக்கேன். இல்ல கண்டக்டர் சம்பளத்தை வாங்கி எனக்கு தாராரா? அவன் பேசாம ஆணியடிச்ச மாதிரி சீட்டுல ஏறி ஒக்காந்துக்கிருவார், நாங்க கஷ்டப்படணுமா? முடியாது என்று ஒருவன் எகிற மொத்த ஆட்களும் இதையே சொல்ல கண்டக்டர் திணறினார்.

கண்டக்டர் தேனாம்பேட்டை ஒரு டிக்கெட்

‘பாஸ் பண்ணி விடுங்க’

‘யாரும் வாங்க மாட்டேன்கிறாங்க’

‘பாஸ் பண்ணி விடுங்க’ என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

‘சார்… ஆலையம்மன் கோயில்’

‘பாஸ் பண்ணி விடுங்க’

ஒரு பாண்டி பஜார்

‘பாஸ் பண்ணி விடுங்க’

‘ஹலோ கண்டக்டர், டிக்கெட்ட வந்து எடுய்யான்னு சொன்னா பாஸ் பண்ணி விடுங்கன்னு சொல்லிட்டு, என்னமோ மேனேஜர் வேல பாக்குற ஆளு மாதிரி ஜம்முன்னு ஒக்காந்திட்டு இருக்க, வாய்யா எந்திரிச்சு’ என்று ஒரு பெரியவர் கத்த.

‘கூட்டமா இருக்குல்ல’

‘ம்’ கூட்டம், எங்க ஊர்ல இருக்கிற கண்டக்டர் எல்லாம் காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நாயா அலஞ்சுட்டு கெடப்பான். இங்கதான்யா, கண்டக்டர் மேனேஜர் மாதிரி ஒக்காந்திட்டு வேல செய்றாரு’ என்று ஒருவர் எகிற’

‘ஆமாங்க, நெசந்தான். நானும் வருசம் பூரா பஸ்லதான் போயிட்டு இருக்கேன், ஆளு இல்லன்னாலும் எந்த கண்டக்டரும் வந்து டிக்கெட் எடுக்கிறதல்ல. நாம தான் போய் எடுக்கணும். கேட்டா, ஏர்ற வழியில ஏறி டிக்கெட்ட எடுத்திட்டு போகணும்னு புதுசா ஒரு இலக்கணமும் சொல்வாங்க பாருங்க’ அப்படியே பத்திட்டு வரும் என்று ஒரு பயணி சொல்ல பஸ்ஸில் நின்று கொண்டிருந்த பாதிப் பேருக்கு மேல் டிக்கெட் எடுக்காமலே இருந்தனர்.

சீக்கிரம் டிக்கெட் எடுங்க செக்கர் வந்திரப் போறாங்க.

‘வரட்டும்.. செக்கர கேப்போம்’

கண்டக்டர் ஒக்காந்துக்கிருவாரு நாம தான் போயி டிக்கெட் எடுக்கணுமான்னு கேப்பமே’

‘ஆமாங்க இதுல என்ன ஒரு பிரச்சனைன்னா, டிக்கெட் எடுக்கலன்னா, நம்மள தான புடிச்சு ஏறுறாங்க. இந்த கண்டருக்கும் சேத்து பைன் போடணுமுங்க. அப்பதான் கண்டக்டரும் பயப்படுவாங்க, இங்க இருக்கிறவன், பயணிகள குற்றவாளிகளாக்கிட்டு, கண்டக்டர தப்பிக்க வச்சிர்ராங்க. அதுனால வர்ற கோளாறு தான், இதெல்லாம் என்று ஒருவர் சொல்ல, கண்டக்டர் இறங்கி வராமலே இருந்தார்.

‘இன்னைக்கு என்ன பண்றானுகன்னு பாப்போம். டிக்கெட்டே எடுக்கக் கூடாது’ என்ற பிடிவாதத்தில் எல்லோரும் இருந்தனர்.

கண்டக்டரும் அசைவேனா என்றிருந்தார்.

ஒன்னோட வேல டிக்கெட்ட எடுக்கிறது. அதவிட்டுட்டு, நீ பேசாம ஒக்காந்திட்டு இருந்தய்னா. மொதல்ல கண்டக்டர் ஒக்காந்திட்டு இருக்கிற சீட்ட தூக்கணும்யா. அப்பதான், இந்த கண்டக்டருங்க ஒக்கார மாட்டாங்க’ என்று எகிறினர் சிலர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் மெல்ல நகர்ந்து வந்தார்.

‘ஏன்… நீங்க வந்து டிக்கெட் எடுக்க மாட்டீங்களோ?’ என்று கண்டக்டர் சொல்ல,

‘ஏன், நீங்க வரமாட்டீங்களோ? டிக்கெட் குடுக்கிறது தான ஒன்னோட வேல. அத விட்டுட்டு சீட்டுல ஏறி ஒய்யாரமா ஒக்காந்துட்டு பெருசா பேச்சு வேற பேசுற பேச்சு’ என்று ஒருவர் கேட்க கண்டக்டர் முகத்தில் ஈயாடவில்லை.

முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு ஒரு ஆள்விடாமல் எல்லோரிடமும் டிக்கெட் கொடுத்தார்.

‘ம்… இது தான் சரி’ என்ற பயணிகள் உற்சாகமடைந்தனர்.

அன்று முழுவதும் நடந்து கொண்டே இருந்தார் கண்டக்டர் .

கண்டக்டர் தன் சீட்டில் உட்காரவே வெட்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *