போஸ்டர் செய்தி

கட்டுப்பாடின்றி ‘ஆவின்’ பால் விற்பனைக்கு ஏற்பாடு

Spread the love

சென்னை, மார்ச் 26–

தமிழகம் முழுவதும் இயங்கும் ஆவின் பாலகங்களில், தட்டுப்பாடின்றி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஆவின் முகவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, காலை முதல் இரவு வரை ஆவின் பாலகங்களில் எந்தத் தட்டுப்பாடும் இன்றி ஆவின் பால் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் பால் கிடைக்குமா? என்று அஞ்ச வேண்டாம். ஆவின் பால் கிடைக்காது என்ற அச்சத்தால், ஒரே நேரத்தில் ஆவின் பாலகங்களில் குவிவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆவின் பால் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக 1 லட்சம் லிட்டர்

சென்னையில் தினமும் 12 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு 13 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் வினியோகிக்கப்பட்டது. பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 1 லட்சம் லிட்டர் கூடுதலாக சப்ளை செய்யப்பட்டுள்ளது.

மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 பால் பண்ணையில் இருந்தும் பால் வினியோகம் வழக்கத்தை விட முன் கூட்டியே தொடங்கப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக ஆவின் பால் விற்பனை மையங்கள் முழுமையாக செயல்படும். 38 இடங்களில் ஆவின் பார்லர்கள் இயங்குகின்றன. அங்கு பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 1 லட்சம் லிட்டர் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஆவின் நிர்வாகம் தகுந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

இதே அளவு தினமும் சப்ளை செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *