சிறுகதை

கடைசியில்… – மு.வெ.சம்பத்

சுதாகரன் தாய் தந்தையர் வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். வெளி நாட்டு வேலையை உதறி விட்டு தாய் தந்தையருடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வந்து தற்போது ஒரு கம்பெனியில் உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளான்.

வீட்டில் சமையல், மற்றும் இதர வேலைகள் செய்ய ஆட்கள் அமர்த்தப்பட்டனர். அடிக்கடி கிராமத்திற்குச் சென்று வயல் வெளிகள் மற்றும் தோட்டங்கள் பராமரிப்புகள் சரி வர நடக்கின்றதா என கண்காணிப்பதில் சுதாகரனுக்கு அலாதி மகிழ்ச்சியே.

கிராமத்தில் இருக்கும் வீட்டை நல்ல விதமாக பராமரிப்பு செய்து போக வர தங்குவதற்கு ஏதுவாக வைத்திருந்தான். வீட்டை அப்பப்போ பெருக்கி துடைத்து விட ஆட்களை நியமித்திருந்தான்.

தாய் தந்தையர் மகனுக்கு திருமணம் கை கூட குல தெய்வ வழிபாடு செய்து அந்த கிராம மக்களுக்கு அவர்கள் மெச்சும் வண்ணம் சாப்பாடு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஊரில் படிக்கும் பிள்ளைகளுக்கு புத்தகம், பை, பேனா மற்றும் சீருடைகள் அளித்து மகிழ்ந்தார்கள். சுதாகரன் தான் படித்த பள்ளியில் சேதமான கட்டிட பகுதிகளை சீர் செய்து வண்ணத்தால் ஜொலிக்கச் செய்தான். சுதாகரனுக்கு திருமணம் தள்ளிப் போவது தான் அவனது பெற்றோருக்கு மனக்கவலையாக அமைந்தது. சுதாகரன் சுய நலவாதியாக இல்லாமல் பொது நல அக்கறை கொண்டவனாக இருந்தது தாய் தந்தையருக்கு மகிழ்வாக அமைந்தது.

வெகு நாட்களுக்குப் பிறகு வந்த தனது பால்ய நண்பனான நடேசன் என்ன கணேசா சௌக்கியமா என்று மலர்ந்த புன்னகையுடன் கூறிக் கொண்டே உள்ளே வந்தார். என்ன உன் பையன் ஊரில் நிறைய தொண்டு செய்துள்ளானாமே, வீட்டையும் பிரமாதமாக ஆக்கி விட்டானாமே, நிலங்கள் இப்போது பயிர்களால் நிறைந்து கம்பீரமாக நிற்கின்றதாமே என்று அடுக்கிக் கொண்டே போனவனை கணேசன் டே, கொஞ்சம் மூச்சு விட்டு பேசு என்றார். தந்த காபியை குடித்து விட்டு நம் ஊர் பெண்கள் கை பக்குவமே தனி தான் என்றார் நடேசன். சரி உன் பையன் எங்கே நான் பார்ககணும் என்று நடேசன் கூறியதும் அவன் வெளியே சென்றுள்ளான் என்றார் கணேசன்.

மேலும் கணேசன் நடேசனிடம் உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்க, நடேசன் எனக்கு ஒரு பையன் தான். அவனுக்கு நல்ல படியாக கல்யாணம் பண்ணி விட்டேன். எனது மருமகள் நல்லவள். வேலை பார்க்கிறாள். வாழ்க்கை கடவுள் புண்ணியத்தில் நன்றாகவே செல்லுகிறது என்று கூறி விட்டு, உன் பையனுக்கு கல்யாணம் பண்ணியா என்று கேட்க, கணேசன் ஒரு வரனும் அமைய மாட்டேன் என்கிறதே என்றதும் நடேசன் எனக்கு தெரிந்த ஒருவர் தன் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டுள்ளார். ஏன் நாம் உன் பையனுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தால் என்ன என்றார்.

நடேசன் முயற்சியால், இன்று பெண் பார்க்கும் படலத்தில் கணேசன் குடும்பத்தினர் பெண் வீட்டிற்கு வந்திருந்தனர். கணேசன் பெண்ணின் தந்தையிடம் பல விஷயங்கள் கலந்து ஆலோசித்தார். பின் பெண்ணை வரச் சொல்லுங்கள் என்று நடேசன் கூறியதும் பெண் வந்து சம்பிரதாய முறைப்படி காபி கொடுத்தாள். பெண்ணை பார்த்த கணேசன் தம்பதியர் தங்கள் மகனைப் பார்க்க, அவன் ஒரு புன்முறுவலைப் பூத்தான். பின் நடேசன் எங்கள் பக்கம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் உங்கள் பெண்ணிற்கு செய்வதைச் செய்யுங்கள் என்றார். கல்யாண செலவில் நாங்கள் பாதி சதவீதம் ஏற்றுக் கொள்ளுகிறோம் என்றார் கணேசன். பெண்ணின் தாய் தந்தையர் பெண்ணைப் பார்க்க, அவள் கண்ணால் பொறுங்கள் என்றாள்.

அதற்குப் பிறகு பெண் அவர்களைப் பார்த்து நான் சில விஷயங்கள் பேசலாமா என்றதும் கணேசன் தாராளமாக பேசலாம் என்றார். என் பெயர் சுகிர்தா. நான் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். ஒரு நல்ல கம்பெனியில் நல்ல பதவியில் பணி புரிகின்றேன். விடுமுறை நாட்களில் சில சமூக சேவைகள் செய்கின்றேன். நான் உங்களிடம் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றாள். கல்யாணம் என்ற போர்வையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை வீட்டு வேலை செய்யும் பொம்மையாக மாற்றி ஆட்டி வைப்பதில் எனக்கு இணக்கமில்லை. கணவன் போடும் கட்டளைகளுக்கு எல்லாம் பணிந்து செல்ல நான் விரும்பவில்லை. எங்கள் வீட்டார், உங்கள் வீட்டார் என்று கல்யாணத்துக்கு அப்புறம் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. பெண் வீட்டாரை சமமாக நடத்தாமல் ஒரு படி தாழ்ந்து நடத்துவது நான் விரும்பாத ஒன்று. அதே மாதிரி இத்தனை காலம் வாழ்ந்து வரும் பெற்றோர்களை உதாசீனப் படுத்துவது, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இவற்றில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. நான் உங்கள் வீட்டிற்கு கல்யாணம் ஆகி வந்தால், தற்போதுள்ள முறையே பின் பற்ற வேண்டும். சமையல் மற்றும் இதர வேலை செய்பவர்கள் தொடர்ந்து பணியில் தொடர வேண்டும். நான் பணியைத் தொடர அனுமதி வேண்டும். நான் யார் சுதந்திரத்திலும் தலையிட மாட்டேன், அதே போன்று எனது சுதந்திரத்திலும் யாரும் தலையிடக் கூடாது. நான் எனது தாய் தந்தையரைப் போன்றே எனக்கு வரும் கணவன் தாய் தந்தையரை கவனிப்பேன். அவர்கள் மனம் நோகாத படி நடப்பேன். வீட்டின் செலவை நானும் எனக்கு வரும் கணவருமே ஏற்போம். சம்பளத்தை அப்படியே கணவனிடம் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு ஒத்து வராது. எனது சம்பளத்தில் நான் குடும்ப சம்பந்தமாக செலவு பண்ணுவதை தடுக்கக் கூடாது. நான் அனாவசியமாக செலவு செய்தால் யாரும் கண்டிக்கலாம் என்றாள். மாதந்தோறும் செலவு கணக்கு எழுதி அதற்குண்டான பணத்தை ஒதுக்கி விட வேண்டும். ஆடம்பர செலவில் எனக்கு எப்போதும் விருப்பமில்லை என்றாள். விருந்தாளிகள் யார் வீட்டிலிருந்து வந்தாலும் சமமாக பாவிக்க வேண்டும். நாளை வாரிசு வந்தால் கணவன் மனைவி இருவர் மட்டும் தான் செலவிட வேண்டும். வருங்காலத் திட்டம் போட்டால் அதை பொதுப்படையாக பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றாள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்றாக புரிதலில் தான் வாழ்க்கையே. சிறிது காலம் வாழ்ந்து பிரிவது வாழ்க்கையல்ல என்றாள். தலை நிமிர்ந்து வாழும் பெண்ணே தலை சிறந்தவளாகத் திகழ்கிறாள் என்றாள். நம் வீட்டு விஷயம் அடுத்தவர் விவாதிப்பது ஏற்புடையதல்ல என்றாள். நான் மற்ற பெண்கள் போன்று நேரே பேச தைரியமின்றி பின்னால் பதுக்குபவள் அல்ல என்று கூறி நிறுத்தியவளை எல்லோரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். இவள் இவ்வளவு பேசி விட்டாளே. கடைசியில் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என சுகிர்தா தாய் தந்தையர் வார்த்தைகள் வராமல் திகைத்து நிற்கையில், கணேசன் மற்றும் அவர் மகன் சுதாகரன் கோரஸாக நாங்கள் சுகிர்தா போட்ட கண்டிஷனுக்கு ஒப்புக் கொள்கிறோம். அவளை நவீன புரட்சிப் பெண்ணாகவே பார்க்கிறோம் என்றனர். உடனே நடேசன் கல்யாண மேளம் கொட்ட வேண்டியது தானே என்று கூற, அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பி பூத்துக் குலுங்க ஆரம்பித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *