போஸ்டர் செய்தி

கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: கர்நாடகத்தில் ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை

பெங்களூரு, மே.16-
கர்நாடகத்தில் ரூ.88 கோடி செலவில் செயற்கை மழைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். குறிப்பாக மங்களூரு, உடுப்பி, குடகு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக ஜூன் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மழை குறைவாகத்தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் செயற்கை மழையை பெய்விக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரூ.88 கோடி செலவில் பெங்களூரு மற்றும் உப்பள்ளியில் இதற்கான மையங்கள் அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்த படுகிறது. கர்நாடகத்தில் ஏற்கனவே இத்தகைய செயற்கை மழை பெய்விக்கப்பட்ட வரலாறு உண்டு.
விமானம், ஹெலிகாப்டரில் ரசாயனப் பொருட்களை எடுத்துக் கொண்டு போய் அதைக் காற்றில் தூவுவதன் மூலம் செயற்கை மழையை உருவாக்க முடியும்.
செயற்கை மழைக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இது 2 ஆண்டுகளுக்குரியதாகும் என்று அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக மாநிலத்தில் வறட்சி நிலைமை குறித்து மாவட்ட துணை ஆணையாளர்கள், ஜில்லா பஞ்சாயத்துக்களின் தலைமை செயலாக்க அலுவலர்கள் ஆகியோருடன் முதல்வர் குமாரசாமி ஒளி – ஒலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிலைமை குறித்து உன்னிப்பாக கேட்டறிந்தார். இன்னும் 10 நாட்களுக்குள் அடுத்த ஆண்டுக்கு டெண்டர் விடப்படும் என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.
2017ல் இதேபோல செயற்கை மழைக்கு (வர்ஷதரே திட்டம்) முந்தைய காங்கிரஸ் அரசு ரூ.35 கோடியை செலவு செய்துள்ளது. மாநிலத்தில் 2,999 கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 2,322 டேங்கர் லாரிகள் மூலம் 1,632 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்க பட்டு வருகிறது. 1367 கிராமங்களுக்கு 1,073 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 6,428 வார்டுகளில் 451 வார்டுகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *