சென்னை, ஏப். 29–
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு இந்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, அவருக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட நினைவிடத்தை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது. அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.
இதேபோல, கலைஞர் கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக, மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் 8551 சதுர கி.மீ. பரப்பளவில் ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த சின்னம், தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு சீமான் போன்ற ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும், பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்தனர். மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் பெரிதும் ஆதரித்தனர். இதன் தொடர்ச்சியாக, பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அண்மையில் சமர்ப்பித்திருந்தது. பேனா சின்னம் வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் பகுதியில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் எனவும் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்திய நிபுணர் குழு அனுமதி
இந்நிலையில், இந்த அறிக்கையை ஆய்வு செய்த இந்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவானது, மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர் குழுவே அனுமதி வழங்கி இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியும் கிடைத்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி கொடுக்கப்பட்ட போதிலும், சில முக்கிய நிபந்தனைகளையும் நிபுணர் குழு விதித்துள்ளது.
அதன்படி, பேனா சின்னம் வைப்பதற்கு ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. கட்டுமானப் பணி நடைபெறும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது, கட்டுமானக் கழிவுகள் கடலுக்குள் போட கூடாது, ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் கட்டுமானம் நடைபெறக்கூடாது என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளை நிபுணர் குழு அறிவித்துள்ளது.