சென்னை, ஜூன் 16–
ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடன் மொபைல் செயலிகளை செல்பேசியில் இருந்து ஆழித்துவிடுங்கள் என்று தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள காணொளியில் கூறி இருப்பதாவது:–
“ஆன்லைன் மோசடிகளை பற்றி தொடர்ந்து நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். அண்மையில், ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் லோன் வாங்க ஏராளமான செயலிகள் வந்துள்ளது. அந்த கடன் செயலிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து, லோன் அப்ளை செய்ய சொல்வார்கள். அப்ளை செய்யச் சொல்லும் போது, ஒரு போட்டோ கேட்பார்கள்.
மோசடி ஆப்கள்
அதேபோல், உங்களுக்கு தெரிந்தவர்களின் போன் எண், மின்னஞ்சல் முகவரி கேட்பார்கள். தொடர்பு முகவரி கேட்டு வாங்கிக்கொண்டு, ரூ.3,000, ரூ.4,000, ரூ.5,000 என உங்களுக்கு கடன் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்களுக்கு அனுப்பி, 10,000 ரூபாய் கொடுங்கள், இல்லை என்றால் உங்கள் ஆபாச போட்டோவை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று பயமுறுத்தி ரூ.10 ஆயிரம் வாங்கி விடுவார்கள். இது தொடர் கதையாகி விடுகிறது. எனவே உங்கள் நிம்மதி போய்விடும்.
அந்த ஆபாசப் புகைப்படம் உண்மையில்லை என்றாலும் மற்றவர்கள் நம்பமாட்டார்கள். இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்களை சிக்க வைத்து பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி நடந்து கொண்டு உள்ளது.
நமது காவல்துறை அதுபோன்றவர்களை கைது செய்ய நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயலிகளை முடக்கவும் முயற்சி செய்துகொண்டுள்ளோம். ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான செயலிகள் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். எனவே நீங்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியை சொல்றோம்” என்று கூறி உள்ளார்.
மேலும் மோசடி செயலிகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan இந்த ஆப்கள் மோசடியான செயலிகள். இந்த செயலிகளை எல்லாம் உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து விடாதீர்கள். ஒருவேளை மொபைலில் இருந்தாலும் உடனே டெலிட் செய்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.