சிறுகதை

கடன் நட்பை முறிக்கும்! – வேலூர்.வெ.இராம்குமார்

“ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்கள் நீடிப்பு..டிவியில் செய்தியைக் கேட்டதும் வெறுப்படைந்தார் சந்திரன்.

‘‘செலவுக்கு வேற பணமில்லை.என்ன செய்வது..’’சிந்தித்தவருக்கு,

மூன்று மாதங்களுக்கு முன் நண்பர் மோகனுக்கு கடனாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது நினைவுக்கு வரவே..

செல்போனை எடுத்து தொடர்பு கொண்டார்..

நாட் ரீச்சபிள் என வரவே..அவனை பார்க்கக் கிளம்பினார்..”

*

“வாசலில் சந்திரனைக் கண்டதும் ஏன் வெளியே நிற்கறீங்க உள்ளே வாங்கண்ணே.. ’’வரவேற்றாள் வள்ளி.

“நானென்ன விருந்து சாப்பிடவா வந்திருக்கேன்.மோகன் எங்கே..’’ கோபத்துடன் கேட்க,

“வெளியே போயிருக்கார்ண்ணே..இப்போ வந்திடுவாரு.மோர் சாப்பிடறீங்களா?டீ சாப்பிடறீங்களாண்ணே?’’

” வெளியே போயிருக்கானா..எவளையாவது கொஞ்ச யோயிருக்கானா..உங்களுக்கு கடன் கொடுத்தேன்ல்லே..விஷத்தை கொடும்மா..”

“தன் கணவனைப் பற்றி அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியானாள்..இவர் சொன்னது போல,அவர் எந்த பெண்ணையாவது வைத்திருப்பாரோ..இல்லை..இல்லை இருக்காதே என அவளது உள்மனம் உடனே மறுத்தது.

சந்திரன் கோபக்காரன் என மோகன் சொல்லி வள்ளிக்கு தெரியும்..அதை இப்போதுதான் நேரில் காண்கிறாள்..

ஏண்ணே,இப்படியெல்லாம் கத்திப் பேசறீங்க..ஏதுவாயிருந்தாலும் உள்ளே வாங்க.வெளியே நாலு பேர் கேட்டா தப்பா நினைப்பாங்கண்ணா?

“என்னது! நான் கத்தறேனா..ஆமாம்! கத்த மட்டுமல்ல..நாக்கை பிடுங்கற மாதிரி கேட்கவும்தான் வந்திருக்கேன்..ஆஸ்பத்திரி செலவுக்கு கடன் கேட்டான்னுதான் பரிதாபப்பட்டு கொடுத்தேன். ஒரு மாசத்துல தர்றேன்னு சொன்னான்..ஆச்சு,மூணு மாசமாயிடுச்சு.பணத்தையும் காணோம்..போனையும் காணோம்.”

“இந்த லாக்டவுண்ல இரண்டு மாசமா அவரு வேலைக்கே போகலைண்ணே.. சொல்லிவிட்டு பார்த்தாள்..அக்கம் பக்கத்தினர் தூரத்தில் இடைவெளியிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..சந்திரனோ,வாசலைவிட்டு வீட்டுக்குள் வருவது போல அவளுக்கு தெரியவில்லை.. அவமானத்தால் அழுகை பிறீட்டு வரும் நிலையிலிருந்தாள் வள்ளி!

“நான் மட்டும் கோடீஸ்வரனா.. நானும் அன்றாடங் காய்ச்சிதாம்மா..கடன் வாங்கிட்டா, அப்படியே கொடுத்தவனை மறந்திர்றதா?

“அப்போது தூரத்தில் பார்த்தாள்..மோகன் வந்து கொண்டிருப்பது தெரியவே..நிம்மதி பெருமூச்சுவிட்டாள்..”

“சுற்றி முற்றிலும் பார்த்தபடி புரியாமல் சந்திரன் அருகே வந்தவன்,வா!சந்திரா..ஏன் உள்ளே வராமல்,வெளியே நின்னுட்டிருக்கே..அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் இங்கேயே பார்த்திட்டிருக்காங்க..”

“நானும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் உள்ளே வரமாட்டேங்கறாருங்க..பணத்தை கேட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசறாருங்க.சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன்றாருங்க..வள்ளி கூறவும்..

“அவனும் என் நிலமையிலதானே இருக்கான். பணம் வாங்கின பிறகு நானும் போன் பண்ணலை. தப்பு என் பேர்லதான்..அதற்காக கந்துவட்டிக்காரன் போல வாசல்ல நின்று கத்தறது எந்த விதத்துலடா நியாயம்..எதாயிருந்தாலும் உள்ளேப்போய் பேசிக்கலாம் வாடா.என்றான்!

“முடியாது!என்ன,பேசி மோர் கொடுத்து என்னை ஏமாத்தி அனுப்பிடலாம்ன்னு பார்த்தீயா..பணம் இல்லாம வீட்டுக்கு போனால் என் பொண்டாட்டி மதிக்க கூடமாட்டாள்டா.. நண்பன்னா, இளிச்சவாயனா,ஏமாந்தவனா இருப்பேன்னு பார்த்தீயா..உங்கிட்டே பணம் வாங்காம இந்த இடத்தைவிட்டு நான் நகரமாட்டேண்டா!

“தப்புத்தாண்டா..வாழ்க்கையில எனக்கு பணம்தான் முக்கியம்..எங்கிட்டே யாராவது பணம் வாங்கி, கொடுக்கலைன்னாலும் தாமதிச்சாலும் நான் சைக்கோவாயிடுவேன். நீ உன்னைப் பற்றி அடிக்கடி பெருமையா பேசும்போதெல்லாம் நான் நம்பலை..இப்ப,நேரடியாவே பார்த்துட்டேன்..உடனே தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து சில இரண்டாயிரம் நோட்டுக்களை எடுத்து அவன் கைகளில் திணித்தவன்,இதுல பன்னிரெண்டாயிரம் ரூபாய் இருக்கு.வெச்சுக்கோ..எப்போ,என் வீட்டுக்கு முன் வந்து என் மனைவியையும் என்னையும் அவமானபடுத்தினீயோ,அப்பவே என் நண்பன்ங்கற அடையாளத்தை நீ இழந்துட்டே..இத்தோட உன் சகவாசத்துக்கு ஒரு குட்பை..அவனது பதிலுக்கு கூட காத்திராமல்,மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவன்,கதவை வேகமாக சாத்தினான்.”

“கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே நண்பன் கொடுத்த பணத்தை வாசலில் வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் சந்திரன்!

*

“கணவனின் ஆக்ரோஷம் தணியும் வரை காத்திருந்த வள்ளி,அவனை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தம்ளரில் மோர் கொடுத்தாள்..”

“மோரை வாங்கி மட மடவென குடித்தான்..அப்போதுதான்,தனது கணவனின் கைவிரலை கவனித்தவள்,அதிர்ந்து போனாள்..என்னங்க!உங்க கையில இருந்த மோதிரத்தை எங்கேங்க காணோம்?

“வள்ளி!ஊரடங்கு உத்திரவை மேலும் நீடிப்புன்னு அறிவிப்பு வந்ததுமே நான் அதிர்ச்சியாயிட்டேன்.எப்படியும் வேலைக்குப் போயிடாலம்ன்னு நினைச்ச எனக்கு ஏமாற்றமாயிடுச்சு..செலவுக்கு கையில பணம் இல்லாதப்போ,உடம்புல தங்கமோதிரம் இருந்து என்ன பயன் சொல்லு.. உங்கிட்டே சொன்னா,கஷ்டப்படுவேன்னு தெரியும்.அதனாலதான் சொல்லலை..சேட்டுகிட்டே அடமானம் வெச்ச பணத்துல,இன்னைக்கு சந்திரனுக்கு பாதி பணம் கொடுத்திட்டு,அடுத்த மாசம் மீதிப்பணம் கொடுத்திடலாம்ன்னு நினைச்சேன்.அவசரப்பட்டுட்டான்..அதனால,மோதிரத்தை அடமானம் வெச்ச பணம் பன்னிரெண்டாயிரத்தையும் அவங்கிட்டே கொடுத்துட்டேன்..”

“அதற்காக இரண்டாயிரம் ரூபாய் ஏங்க அதிகமா தூக்கிக் கொடுத்தீங்க,அவருக்கு..அவர் பேசின பேச்சுக்கு நானா இருந்திருந்தால் தந்திருக்கவே மாட்டேன் தெரியுமா?

“அவன் நம்மை அவமானப்படுத்தினது எனக்கு தன்மானப் பிரச்சனையாயிடுச்சு..அதனால கொடுத்திட்டேன்..இனி அவனால பிரச்சனையில்லை விடு!

“இன்னும் அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டு செலவுக்கு என்னங்க பண்றது..நம்மகிட்டே கையில பணமேயில்லையே..”

“அதிர்ச்சியுடன் சற்று யோசித்தவன்,தன் மனைவியை பார்த்தான்..அவனது பார்வை அவளது தாலியை நோக்கி சென்றது..”

“கணவனின் பார்வையையும் எண்ணத்தையும் புரிந்து கொண்ட வள்ளியோ,வே..வேண்டாம்ங்க,என் உடம்புல தங்கமா தொங்கறது இந்த தாலிச் சரடு மட்டும்தாங்க..”

“உன் நிலமை புரியுது…உனக்கு நம்ம உயிர் முக்கியமா,தங்கச் சரடு முக்கியமான்னு சொல்லு..தங்கச்சரடு முக்கியம்ன்னா, போட்டுக்க . வாழணும்ன்னு ஆசையிருந்தா,மஞ்சள் கயிறை எடுத்துட்டு வா!

“கணவன் கூறியதைக் கேட்டதும் தன்னையறியாமல் தாலியைக் கழட்டி அவனிடம் நீட்டினாள்..”

“தேங்க்ஸ் வள்ளி! நான் இதை அடமானம்தான் வைக்கப் போறேன்.அடுத்தமாசமே மீட்டுடலாம்..

“தன்னையறியாமல் விரக்தியுடன் தலையாட்டினாள்..”

“சரி!நேரமாயிடுச்சு..சேட்டு கிளம்பிடப் போகிறான்..முதல்ல,அவன் வீட்லபோய் இதைக் கொடுத்துட்டு,முதல்ல பணம் வாங்கிட்டு வந்திடறேன்.வந்ததும்,மஞ்சள் கயிறால தாலியை உன் கழுத்துல கட்டிடறேன் வள்ளி!

“வள்ளிக்கு ஒருபுறம் கவலையாக இருந்தாலும்,மறுபுறம் சந்தோஷமாகவே இருந்தது..கணவனின் ஜாதகப்படி,அவனுக்கு இரு மனைவி அமையும் யோகம் இருந்தது..இவளே,பலமுறை தன் கணவன் எதாவது பெண்ணை தனக்கு தெரியாமல் வைத்திருக்கிறானோ என கூட நினைத்ததுண்டு..

“இனி கவலையில்லை..அவன் மீதான ஐயம் அவளுக்கு தீர்ந்திருந்தது..தானே அவன் கைகளால்,தனது கழுத்தில் இரண்டாவது முறையாக தாலி கட்டப்போகிறான் என்று எண்ணுகையில்..வெட்கத்தால் அவளது முகம் இப்போது சிவக்க ஆரம்பித்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *