சென்னை, பிப்.10-
யூ.டி.எஸ். செயலியில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 50.75 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. ரெயில் பயணிகளின் சவுகரியங்களை கருத்தில்கொண்டும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் எடுக்கலாம். மேலும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பிப்பதற்கான வசதி நாடு முழுவதும் இருக்கிறது. ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ்., வின்டோஸ் போன்களிகளில் ‘யூ.டி.எஸ்.’ செயலியை எளிதாக பதிவிறக்கம் செய்து காகிதம் மற்றும் காகிதம் இல்லா பயன்பாடு முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில் யூ.டி.எஸ். செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 50.75 லட்சம் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 2.51 கோடி முன்பதிவு அல்லாத பயணிகள், வரிசையில் காத்து நிற்காமல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.
இதேபோல, கடந்த 10 மாத காலத்தில் யூ.டி.எஸ். செயலியில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாக ரூ.24.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கியூ.ஆர்.கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் எடுக்கும் வசதி, பயணிகள் புறப்பட வேண்டிய ரெயில்நிலையத்தின் 15 மீட்டர் தொலைவில் இருந்து டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் காகிதம் அல்லாத யூ.டி.எஸ். டிக்கெட்டுகளை முந்தைய நாளுக்கு எடுக்கமுடியாது. பயணம் செய்யும் அன்றைய தினமே எடுக்கவேண்டும். குறிப்பாக டிக்கெட் எடுத்த 1 மணி நேரத்துக்குள் பயணம் செய்யவேண்டும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, டிக்கெட்டுகளை காண்பிக்காத பட்சத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக கருதப்படும்.
இதேபோல டிக்கெட் எடுப்பதற்காக கூட்டநெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் மையங்களில் வரிசையில் காத்து நிற்பதை தவிர்ப்பதற்காக பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய, பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க மற்றும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிப்பதற்காக யூ.டி.எஸ். செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.