செய்திகள்

கடந்த ஆண்டு சென்னையில் 409 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சென்னை, ஜன.2–

2021ஆம் ஆண்டில் சென்னையில் 409 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும் குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை பெருநகரக் காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1.1.2021 முதல் 31.12.2021 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 253 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 96 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தியும் மற்றும் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற 4 குற்றவாளிகள், போக்சோ மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள்என மொத்தம் 409 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாள உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 25.12.2021 முதல் 31.12.2021 வரையிலான ஒரு வார காலத்தில் 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *