சிறுகதை

ஓம்கார பாபா

“ஓம்…ஓம்…… பாபா….
ஓம்காரபாபா, ஓம்…. ஓம்…. பாபா
ஓம்காரபாபா என்ற பாடல் ஒலிக்கும் சாயிபாபா வண்டி அந்தத் தெரு வழியே வந்து கொண்டிருந்தது. ஒரு சிலர் ஓடிப் போய் வண்டியைத் தொட்டுக் கும்பிட்டு பணம் கொடுத்தனர்., ஒரு சிலர் வாசலில் நின்றபடியே பணம் கொடுத்தனர்.
அம்மா பாபா வந்திருக்கார் அம்மா ;பாபா வந்திருக்கார் என்ற படியே ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள் . அவள்பெயர் விஷாலி ஒரு ஆண் பாபா படம் வைக்கப்பட்ட வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தான் அவன் பெயர் பாலாஜி . ஓம்… ஓம்… பாபா ஓம்காரபாபா என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. வண்டியை அவன் விடாமல் தள்ளிக் கொண்டே வந்தான்.
அம்மா பாபா வந்திருக்கார்
அம்மா பாபா வந்திருக்கார் என்றபடியே விஷாலி வீடு வீடாக வந்து கொண்டிருந்தாள்.
அம்மா ….. யம்மா என்ற படியே ஒரு பெண் வீட்டிற்குள்ளிலிருந்து வெளியே வந்தாள்.
இந்த பணத்தையெல்லாம் பாபா பேரச் சொல்லி வாங்கிட்டு போயி என்ன பண்ணப் போறீங்க என்று அந்தப் பெண் கேட்டதும் விக்கித்து நின்றாள் விஷாலி
பணத்தையெல்லாம் வாங்கிட்டு போயி பாபா கிட்ட தான் குடுப்போம் என்ற போது, ஓம்…. ஓம்…. பாபா ஓம்கார பாபா என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உண்மையத்தான் சொல்றீங்களா?
“ஆமா”
ஏன் இப்படி சந்தேகமா கேக்குறீங்க”
இல்ல பாபாவ வச்சிட்டு நீங்க தப்பு ஏதும் பண்றீங்களோன்னு நெனச்சேன்.
“இல்லையே வாங்குற எல்லா பணத்தையும் பாபாகிட்ட கொண்டு போயி தான் குடுப்போம் என்று விடாப்பிடியாகவே சொல்லிக்கொண்டிருந்தாள் விஷாலி இந்தக் கேள்வி பாலாஜியை என்னவோ செய்தது.
பாபா வை ஒரு முறை பார்த்துக் கொண்ட பாலாஜி மேலும் வேகமாகத் தள்ளினான்.
ஓம் பாபா ஓம்பாபா ஓங்காரபாபா” என்ற பாடல் அந்தத் தெருவைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது.
அம்மா…… பாபா….. வந்திருக்கார்.
அம்மா…… பாபா வந்திருக்கார்” என்று விஷாலி சொல்லிக் கொண்டே வந்தாள்.
பாபா இங்க வாங்க என்று ஒரு பழுத்த பெரியவர் கூப்பிட்டார்.
“ஐய்யா” என்ற படியே விஷாலி அந்தப் பெரியவரிடம் வந்தாள்.
“ஆமா …. நானும் பாபாவோட டிவோட்டி தான் ….. பாபாவ என்னோட உயிராவே நெனைக்கிறேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெரதமிருந்து, பாபாவ கும்பிடுறேன். வருசத்துக்கு ரெண்டு தடவ சீரடி வேற போறேன். ஆனா எனக்கு பாபாவ வச்சிட்டு ஒங்கள மாதிரி ஊர் ஊரா சுத்தனும் பணம் சம்பாரிக்கணும்னு நான் நெனைக்கல, நீங்க மட்டும் எப்படி என்றார். அந்தப் பெரியவர்.
இதைக் கேட்டதும் கடகடவென கண்ணீர் விட்டு அழுதாள் விஷாலி
யம்மா….. ஏன் இப்படி அழுறீங்க” நான் ஒண்ணும் தப்பா ஏதும் கேக்கலையே என்ற பெரியவர் பாபா வண்டிக்கு வந்து அவராலான பணத்தைப் போட்டு சாமி கும்பிட்டார். அந்தப் பெரியவர். இதை பாலாஜி பார்க்காமல் இல்லை
என்ன பேசுனாரு அந்தப் பெரியவரு” குழம்பிய பாலாஜி தன் மனைவியிடம் அவர் என்ன சொன்னார் என்று மட்டும் அவனால் கண்டு பிடிக்கவே முடியவில்லை .
அழுது கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து ,
விஷாலி…. அந்த பெரியவர் ஒன்கிட்ட என்ன கேட்டாரு? நீ ஏன் அழுற என்று வண்டியைத் தள்ளிக் கொண்டே கேட்டான்.
அவள் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டே நடந்தாள்.
ஓம்பாபா ….. ஓம்பாபா….. ஓங்கார பாபா, பாடல் நிற்காமல் கேட்டுக்கொண்டே இருந்தது. விஷாலி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
ஏய், இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?
“இல்ல…. நாம ரெண்டு பேருமே நல்ல வயசுள்ள ஆளுக தான?’’
“ஆமா, அதுக்கென்ன இப்போ”
காசு போடுற ஆளுக எல்லாமே இங்க பாபாவ வச்சிட்டு வசூல் பண்ற பணத்தையெல்லாம் என்ன பண்றீங்க பாபா கோயிலுக்கு குடுக்கறீங்களா? இல்லையா? இப்பிடி எல்லாருமே கேக்குறாங்க. ஒரு மாதிரியா இருக்கு. இனிமே இந்த பாபா வண்டி வேணாமுங்க. பாபாவ நாம வீட்டுல வச்சு கும்பிடலாம். நம்ம வாழ்க்கைக்கு வேற வேல தேடலாம் . இந்த வண்டிய வச்சிட்டு இருக்கிறதுனால தான் எல்லாரும் நம்மள என்னமோ மாதிரி நெனக்கிறாங்க . நாளைக்கு இருந்து நான் இந்த வண்டி கூட வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தாள் விஷாலி.
“ஏய் , இப்ப என்ன பாபாவ வச்சு தான் நாம வாழ்ந்திட்டு இருக்கமா? அப்படின்னு அவங்க நெனைச்சிட்டு இருக்கிறது. அவங்க தப்பு மனுசங்க எல்லாம் ஏதோவொரு சாமிகள கும்பிடுறாங்க. கடவுள் அவங்களுக்கு வேண்டிய வேலைகள குடுக்கிறாரு. ஆனா கடவுளையே பாக்குறது தான் நம்மோட வேலையா இருக்கு. இத ஏன் இந்த மக்கள் புரிஞ்சுக்கிற மாட்டேங்கிறாங்க என்றான் பாலாஜி.
ம்ஹூகும்…. நீங்க ஆயிரம் சொல்லுங்க. இனிமே நான் பாபா வண்டிக்கு பின்னாடி வரவே மாட்டேன் என்ற படியே அழுது கொண்டிருந்தாள் விஷாலி
ஓம்பாபா ….. ஓம்பாபா ஒங்கார பாபா பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பாபா வண்டி ஒரு தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது
தம்பி தம்பி என்று கூப்பிட்ட குரலை நோக்கித் திரும்பினான் பாலாஜி என்னங்க?
அவன் பேச்சில் கொஞ்சம் கோபம் இருந்தது.
இல்ல பாபா படத்த வச்சிட்டு தெனமும் இப்படி ஊர் ஊரா வண்டிய தள்ளிட்டு போறீங்களே இதுல வர்ற பணத்தையெல்லாம் வச்சு என்ன பண்ணப்போறீங்க.
” …… ம்….கோட்டை கட்டப் போறோம். போய்யா யாரைப் பாரு நாங்க என்னமோ இதுல வர்ற பணத்த வச்சு கோட்டை கொத்தளம் கட்டி வாழப் போறது மாதிரி. யாராப் பாரு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க என்ற பாலாஜி நீங்கெல்லாம் இந்த ஒலகத்தில இல்லாத தப்பெல்லாம் பண்ணிட்டு கடவுள் மேல பாரத்த போடுறீங்க. ஆனா நாங்க அப்படியில்ல கடவுளையே எங்களோட வாழ்க்கை பாரமா நெனைக்கிறோம் .இதுல என்ன தப்பு என்றான் பாலாஜி இதைக் கேட்டவன் தலைதெறிக்க ஓடினான்.
ஓம் பாபா…….ஓம் பாபா….
ஓம் காரபாபா …… பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் பாபா வண்டியை வீட்டில் நிறுத்தி விட்டு வேறு வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் பாலாஜி.
எங்கோ வேறு ஒரு தெருவில் ஓம்பாபா ஓம் பாபா ஓம்காரபாபா என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் ஓடியோடிப் போய் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வண்டியை ஒரு வயதான பெரிவர் தள்ளிக் கொண்டு வந்தார்.
பரவாயில்லீங்க இந்த வயசிலயும் பாபா ஒங்கள கைவிடல . பாபாவ கெட்டியா புடிச்சுக்கங்க. ஒங்கள அவரு காப்பாத்துவாரு என்று சொன்னதைக் கேட்டதும் பாலாஜிக்கு என்னவோ போலானது .
அப்படின்னா, இங்க இருக்கிற மனுசங்க கடவுள்ங்கிறத வயசு வச்சு தான் கணக்கு போடுறாங்க போல. நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம். இது இந்த வயசு ஓடியோடி ஓழைக்கிற வயசு போல என்றவன் அந்த பாபா வண்டி வந்த பெரியவருக்கு பணம் கொடுத்து விட்டு நகர்ந்தான்
ஓம் பாபா, ஓம்பாபா, ஓங்கார பாபா பாடல் அந்தப் பகுதியையே பக்தியில் நிறைத்துக் கொண்டிருந்தது.
பாலாஜி ஓடியோடி உழைக்க ஆரம்பித்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *