செய்திகள்

ஒரே நாளில் 12,464 பேருக்கு கொரோனா பரிசோதனை

Spread the love
* வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் பாதிப்பு அதிகம்
* கோவை உட்பட 5 மாவட்டங்களில் 28 நாட்களாக கொரோனா இல்லை
சென்னையில் பாதிப்பு 8795 ஆக உயர்வு
ஒரே நாளில் 12,464 பேருக்கு கொரோனா பரிசோதனை
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை, மே.22-

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்புடன் வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 689 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 689 பேர் ஏற்கெனவே தொற்று உள்ளவர் களுடன் தொடர்பில் இருந்தவர் கள். இவை தவிர மகாராஷ்டிராவில் இருந்து வந்த 76 பேர், மாலத்தீவு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு சிக்காகோவில் இருந்து வந்த 6 பேர் மற்றும் மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது.

12,464 பரிசோதனை

தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்து 464 சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 400 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 282 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் சென்னை அரசு மருத்துவமனைகளிலும், 4 பேர் சென்னை தனியார் மருத்துவ மனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்களில் 2 பேருக்கு சர்க்கரை நோயும், 4 பேருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பும், ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 65 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் 8,795

அதிகபட்சமாக சென்னையில் 8,795 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, திருப்பூர், கோவை, திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக நோய் தொற்று ஏற்படாதபடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாட்டு பகுதியும் இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, தாராவி பகுதியில் இருந்து வருபவர்களிடம் அதிக அளவில் தொற்று உறுதி செய்யப் படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பெரும் சவால்

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த பயணிகள் பலருக்கு முதலில் எடுக்கப்படும் பரிசோதனையில் எந்தத் தொற்றும் இல்லை எனத் தெரிகிறது. 7 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வீடு திரும்பும் முன்னர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அந்த பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு முதலில் பாதிப்பு இல்லாமல், பின்னர் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவது பெரும் சவாலாக உள்ளது. இதுபோன்ற சவால்களால் நோய்த்தொற்றின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாத நிலை நீடிக்கிறது.

பொது மக்கள் முறையான ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நல்கினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

இதேபோல் இந்திய விமானப்படை மூலம் அவசர நிலையில் விமானப்படை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட 178 பேரில், 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வருகிறவர்களால், தற்போது பெரும் அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவிலேயே மிகக்குறைவாக தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவீதமாக உள்ளது.

முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கவும் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க 12 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *