செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 3,182 தண்டால்கள்: ஆஸ்திரேலிய வீரர் கின்னஸ் சாதனை

சிட்னி, ஜூன் 19–

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 3,182 தண்டால்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் வேறொரு ஆஸ்திரேலியா விளையாட்டு வீரரால் 3,054 தண்டால்கள் எடுத்ததுதான் உலக சாதனையாக இருந்தது. தற்போது டேனியல் ஸ்காலி என்னும் ஆஸ்திரேலியா வீரர், ஒரு மணி நேரத்தில் 3,182 தண்டால்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

டேனியல் ஸ்காலி சி.ஆர்.பி.எஸ் எனப்படும் சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி பாதிப்பு உடையவர். இந்த நோய் அவருக்கு 12 வயதில் கை உடைந்தபோது தொடங்கியது. இதுகுறித்து ஜி.டபிள்யூ.ஆர் நிறுவனம் தனது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் ஸ்காலி தான் கடந்து வந்த பாதையைக் குறித்து சொல்கிறார். இந்த வீடியோ இதுவரை 37,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 1,400 லைக்குகளையும் பெற்றுள்ளது.

முன்பே உலக சாதனை

டேனியல் ஸ்காலி ஏற்கனவே உலக சாதனை படைத்தவர். இவர் பிளாங்க் எனப்படும் உடற்பயிற்சி நிலையை அதிக நேரம் செய்தவர். கடந்த ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் 9 மணி நேரம் 30 நிமிடம் 01 விநாடி நேரத்திற்கு பிளாங்க் எனப்படும் நிலையில் இருந்து சாதனை படைத்தார். இதற்காக அவர் கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டார்.

இதுகுறித்து டேனியல் ஸ்காலி கூறுகையில், “எனக்கு இருக்கும் சி.ஆர்.பி.எஸ் எனப்படும் நோய் கடும் உடல்வலிகளை ஏற்படுத்தும். 12 வயதில் பாதிக்கப்பட்ட எனது கைகளுக்கு, மூளை தவறான செய்திகளை அனுப்பும். மென்மையான அசைவுகள், காற்று அல்லது நீர் கூட எனக்கு பயங்கர வலியைத் தரும். எனக்கு இந்த நோய் இருப்பதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை வரும். இந்த நிலையிலும் நான் உலக சாதனை படைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.