செய்திகள்

ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி: காங்கிரஸ் கட்சி மாநாட்டில் முடிவு

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’: சோனியாகாந்தி பேச்சு

உதய்ப்பூர், மே 16-–

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்குவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது என்று காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிபிர்’ என்ற பெயரில் 3 நாள் சிந்தனையாளர் அமர்வு மாநாடு நடந்தது.

காங்கிரஸ் சிந்தனையாளர் அமர்வு மாநாட்டில், குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்கள், 2024–-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் அடிப்படையில், மாநாட்டின் இறுதியில் ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படும். அதே குடும்பத்தில் இன்னொருவருக்கு டிக்கெட் வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அவர் கட்சிக்காக பணியாற்றி இருக்க வேண்டும்.

‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையும் பின்பற்றப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தொடரக்கூடாது. புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50 சதவீத பதவிகள் அளிக்கப்படும்.

கட்சியில் 3 புதிய துறைகள் உருவாக்கப்படும். பொது உட்கட்சி ஆய்வு, தேர்தல் நிர்வாகம், தேசிய பயிற்சி என்ற 3 துறைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மாநாட்டில் பேசினார். அவர் பேசியதாவது:–-

இந்த மாநாடு ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.

6 குழுக்களிலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் சுருக்கம், என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவின் பரிந்துரையும் விரைவாக செயல்படுத்தப்படும்.

காங்கிரஸ் கட்சி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடத்த உள்ளது. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் 80–-வது ஆண்டில், ‘ஒன்றுபடு இந்தியா’ என்ற கோஷத்துடன் இதை நடத்துவோம். காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-–ந் தேதி இந்த யாத்திரை தொடங்குகிறது. இளையோர், முதியோர் என நாம் அனைவரும் அதில் கலந்து கொள்வோம்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை பாதுகாக்கவும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட பிரச்சினைகளை விளம்பரப்படுத்தவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

இதுபோல், ஏற்கனவே தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான ‘ஜன ஜக்ரான் அபியான்’ என்ற யாத்திரையின் 2-–வது பகுதி, ஜூன் 15-–ந் தேதி தொடங்குகிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகள் இதில் வலியுறுத்தப்படும்.

காங்கிரசில் உட்கட்சி சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல ஒரு பணிக்குழு அமைக்கப்படும். 2024–-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், கட்சி கட்டமைப்பு, கட்சி பதவி நியமனத்துக்கான விதிகள் வகுத்தல், விளம்பரம், தேர்தல் நிர்வாகம், நிதி, தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இக்குழுவில் இடம்பெறுபவர்களின் விவரம், இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்படும். மேலும், காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து ஒரு ஆலோசனை குழுவையும் அமைக்க உள்ளேன். காரிய கமிட்டி தொடர்ந்து நீடிக்கும்.

புதிதாக அமைக்கப்படும் ஆலோசனை குழு, கூட்டாக முடிவு எடுக்கும் குழு அல்ல. அது, மூத்த தலைவர்களின் பரந்த அனுபவத்தை நான் பெற உதவும் குழுவாக இருக்கும். அரசியல் பிரச்சினைகள், கட்சி சந்திக்கும் சவால்கள் பற்றி என் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தும். அக்குழுவில் இடம்பெறுபவர்கள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

நாம் எல்லாவற்றையும் கடந்து வருவோம். இதுதான் நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும். காங்கிரசுக்கு புதிய விடியல் வரும்.

இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.