செய்திகள்

ஐ.பி.எல்: மும்பை – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

சென்னை, ஏப். 13–

சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். டி20 போட்டியின் 5வது நாள் ஆட்டத்தில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

14வது ஐபிஎல் டி20 தொடரின் 5வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் கேப்டன் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 2வது போட்டியில் களம் காணுகிறது. தொடக்க வீரர் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கலக்கல் ஆட்டத்துடன் மார்கன், ரஸ்ஸல், கில் ஆகியோரும் சிறப்பாக ஆடினால் அவர்களுக்கு 2வது வெற்றி நிச்சயம்.

அதே நேரத்தில் மும்பை அணியைப் பொறுத்தவரையில் தொடரின் முதல் ஆட்டத்தில் தோற்கும் 8 ஆண்டு வரலாற்றை 9வது முறையாக இந்த ஆண்டும் நிகழ்த்தியது. ஆனாலும் அந்த அணியில் சிறப்பான வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அடுத்தடுத்து வெற்றியைப் பெறுவது எளிது.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் முன்வரிசை வீரர்களான ரோகித், கிறிஸ் லின், சூர்யகுமார், இஷான் கிஷன் ஆகியோர் பொறுப்பாகவே விளையாடினர். அதன் பிறகு வந்த போலார்டு, பாண்டியா சகோதரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறிவிட்டனர். அதனால் நடுவரிசையில் ஏதாவது மாற்றம் இருக்கலாம். பந்து வீச்சிலும் சிறு மாற்றத்துடன் மும்பை இன்று களம் காணக் கூடும். அந்த மாற்றம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த இரு அணிகளும் 27 ஆட்டங்களில் மோதியுள்ளதில், மும்பை 21-6 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு கடைசியாக விளையாடிய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது.

இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை நோக்கி மும்பையின் ஆட்டம் இருக்கும். அதே நேரத்தில் 2வது வெற்றியை பெற கொல்கத்தா அணியும் போராடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *