செய்திகள்

ஐநாவில் ரஷ்ய தீர்மானத்துக்கு எதிராக முதன்முறையாக வாக்களித்த இந்தியா

நியூயார்க், ஆக. 26–

உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் செலென்ஸ்கி ஐ.நா.வில் காணொலி வாயிலாக உரையாற்றுவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், இந்தியா இரு நாடுகளும் அரசுரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு அழைப்பு விடுத்ததுடன், பேச்சுவார்த்தைக்கு உதவி செய்யவும் முன் வந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக 2 ஆண்டுகள் பதவி வகிக்கிறது. இந்தப் பதவிக் காலம் வரும் டிசம்பரில் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் செலென்ஸ்கி காணொலி வாயிலாக பேசவிருந்தார்.

ரஷ்யா ஆட்சேபம்

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வஸிலி ஏ.நெபேன்ஸியா, நடைமுறைப்படி ஸெலென்ஸ்கி உரையாற்றுவதற்கு முன்பாக அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாதுகாப்புக் குழு கூட்டத்தில் செலென்ஸ்கி பங்கேற்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் நேரில் பங்கேற்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

ஆனால், அது திட்டமிடப்படாத ஒன்று. தற்போது வழக்கமான முறையில் கூட்டம் நடைபெறுவதால், அவரை காணாெலி வாயிலாக உரையாற்ற அனுமதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார். இதைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியா உள்பட 13 நாடுகள் செலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா மட்டும் எதிராக வாக்களித்தது. சீனா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஐ.நா.வில் வாக்களிப்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதுபோன்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா நடுநிலை வகித்துவந்த நிலையில், தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *