சினிமா செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை

சென்னை, அக். 21–

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மிமி’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் கிராமி விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்த தகவலை, தனது டுவிட்டர் பக்கத்தில் ரகுமானே பகிர்ந்துள்ளார்.

லக்‌ஷ்மன் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி, சாய் தம்ஹான்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தித் திரைப்படம் மிமி. வலைதளத்தில் நேரடியாக வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடையேயும் ரசிகர்களிடையேயும், வரவேற்பையும் பாராட்டையும் ஒருங்கே பெற்றது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரது இசையும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக பரம் சுந்தரி என்கிற பாடல், வைரல் ஹிட்டாகியது. இந்தப் பாடலுக்கு யூடியூப் தளத்தில் மட்டும் 21 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

விருதுக்கு பரிந்துரை

தற்போது மிமி படத்தின் இசை கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ள விவரத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். “மிமி திரைப்படத்துக்கான எனது பாடல்கள் 64 வது கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ. நன்றி” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவை தவிர பாஃப்தா விருது, கோல்டன் க்ளோப் விருது, இரண்டு ஆஸ்கர்கள் என சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *