செய்திகள் நாடும் நடப்பும்

ஏழைகளின் குரலாய் ஸ்டாலின்: செவி சாய்த்தார் பிரதமர் மோடி!


ஆர். முத்துக்குமார்


கொரோனா பெரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கை அறிவித்த காலக்கட்டத்தில் சாமானியன் சந்தித்த இன்னல்கள் பல. அதை விட நாடோடிகளாய் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் பலர் நிலை மிக கவலை தருவதாக இருந்தது.

அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் அரசுகள் தரும் பல்வேறு உதவிகளைப் பெற முடியாமல் தத்தளித்தனர். குறிப்பாக குருவிக்காரர், நரிக்குறவர்களின் நிலை மோசமானதாக இருந்தது.. அவர்களின் எல்லா இன்னல்களையும் கண்டறிந்து முதல்வர் ஸ்டாலின் அவற்றை நிவர்த்தி செய்திட பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை மார்ச் மாதத்திலேயே அனுப்பியிருந்தார்.

அதில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

அதில் நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதி உடையவர் ஆவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் சென்ற வாரம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது:–

தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுப்பட்டிருந்த சமூகத்தினரைச் சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரன், ஹட்டி, பிரிஜா சமூகத்தினருக்கும் கிடைக்கும்.

பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் சமூகத்தை சேர்ந்த 1.60 லட்சம் மக்கள் பயன் அடைவர். ஹட்டி இன மக்கள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளனர். அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக அளவில் உள்ள பிரிஜா இனத்தவரும் பயனடைவர். தமிழகத்தில் நரிக்குறவர் பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர் சமூகத்தை சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற்றப்படும். அதன் பிறகு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய திட்டங்களின் பயன்களைப் பெற முடியும்.

மெட்ரிக் படிப்புக்குப் பிந்தய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தர கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர்கள் பயன்பெற முடியும்.

மேலும் மத்திய அரசு கொள்கையின்படி, அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெற முடியும்.

மிகப் பின்தங்கிய வகுப்பில் இருப்போரால் மத்திய, மாநிலத் திட்டங்களை நேரில் அணுகி பெறும் நிலையில் இல்லாதவர்களும் இப்படிப்பட்ட திட்டங்களால் பயன்பெற வழியைக் கண்டாக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published.