சென்னை, மார்ச் 23–
ஏர் இந்தியா கைவிட்டு போனதன் விளைவாக தனியார் விமானங்கள் உச்சத்திற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று எம்.பி.சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “உக்ரைனில் ரஷ்யா இராணுவத் தாக்குதல் தொடுத்ததையொட்டி அங்கு சிக்கித் தவித்த மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர விமானக் கட்டணத்தை ஐந்து மடங்கு தனியார் விமான நிறுவனங்கள் உயர்த்தியது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
இது போன்ற நெருக்கடி காலங்களில், அவர்கள் மக்களிடம் இருந்து சூறையாடுவதை கட்டுப்படுத்த இயலுமா? அதைத் தடுக்க ஏதாவது கட்டுப்பாடு எதிர்காலத்தில் கொண்டு வரப்படுமா? என்பதே என் கேள்வி. அதற்கு பதில் அளித்துள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, விமானம் ஒடுவதற்கான செலவு, சேவையின் தன்மை, உரிய லாபம், பொதுவாக நடைமுறையில் உள்ள கட்டணம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நியாயமான கட்டணத்தை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாட்டிலோ, வணிக முடிவுகளிலோ அரசு தலையிடுவதில்லை எனத் தெரிவித்தார்.
வலுத்தவை வாழ்வது காட்டு நியதி
நாங்க கயிறை அவிழ்த்து விட்டோம். அவர்களாக நியாயமாக நடக்க வேண்டும். இனி கடித்தாலும் குதறினாலும் நாங்கள் தலையிட மாட்டோம். அவர்கள் பாடு, மக்கள் பாடு. இதுதான் சந்தையின் நியதி. வலுத்தவை வாழும் என்ற காட்டு நீதி என்ற செய்தியைத்தான் அவர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடாவின் கைகளுக்கு போகும் போதே சொன்னோம். பொதுத் துறைகள் அவசியம் வேண்டும் என்று… இவ்வளவு சீக்கிரம் தனியார்களின் குரூரம் வெளிப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் தனியார் மீது சமூக பொறுப்புக்கான கட்டுப்பாடாவது விதிக்க வேண்டும். திருடர்கள் கைகளிலேயே சாவியை கொடுப்பது போல் அவர்களாகவே நியாயமாக நடப்பார்கள் என்றால் அரசின் பாத்திரம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.