சிறுகதை

என்றுமே பெருமை தான் – மு.வெ.சம்பத்

சுதிர் பணியிலிருந்து ஓய்வாகி இன்றுடன் மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. இவரது மகள் நிஷா கல்லூரிப் படிப்பில் கடைசி வருடம் பயின்று வருகிறாள். ஓய்விற்குப் பின் பெயிண்டிங் தொழிலை சுதிர் மேற்கொண்டு நல்ல விதமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

தற்போது தைத்திருநாள்நெருங்கி வருவதால், பலர் தங்கள் வீடுகளுக்கு வர்ணம் பூசி அழகு படுத்துவதை வழக்கமாகிக் கொண்டிருந்ததால், அந்த ஊரில் வீடுகளுக்கு வர்ணம் பூசுபவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டு விடும். சுதிர் பொருட்கள் வாங்கித் தந்தால் ஒப்பந்த முறையில் இத்தனை நாள் கணக்கு என்று நிர்ணயித்து வேலைகளை செய்து முடித்துக் கொடுப்பார்.

அன்று ரூபவதி சுதிரைத் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வர்ணம் பூச வேண்டும், வந்து பார்த்து விட்டு என்ன செலவாகவும் என கணக்கிட்டுச் சொல்லுங்கள் என்று கூறிய பின் தொடர்பை துண்டித்தாள். சுதிர் அங்கு சென்று வீட்டைப் பார்த்து விட்டு அளவுகளை கணக்கிட்டு தொகையைக் கூறி விட்டு, வீட்டை பொருட்கள் இன்றி தந்தால் நான்கு நாட்களில் வர்ணம் பூசி முடித்துத் தருகிறேன் என்றார். ரூபவதியிடம் சுதிர் பொருட்களை நீங்கள் ஆர்டர் செய்து வாங்கித் தந்தால் எங்களுக்கு நான்கு நாட்கள் கூலி மட்டும் தந்தால் போதும் என்றார். அதற்குண்டான தொகையையும் சுதிர் கூறினார். ரூபவதி பொருட்கள் நாங்கள் வாங்கித் தருகிறோம், நீங்கள் இரண்டு நாட்களில் வேலையைத் தொடங்கலாம் என்றாள்.

வேலையைத் தொடங்கும் முதல் நாள் மாலை மூன்று பேர்களுடன் வந்த சுதிர் பொருட்களை சரிபார்த்து முடிக்கும் வேளையில் சுதிருக்கு அவர் பெண் கைப்பேசியில் பேச, சுதிர் ருபவதியிடம் நாளை காலை நான் வருகிறேன் என்று கூற, ரூபவதி இவ்வளவு பொருட்களை உங்களை நம்பித் தான் வாங்கியுள்ளேன். போகிறேன் என்று சொன்னாள் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்றதும், சுதிர் பெண்ணிடம் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்றார். எதற்கு பெண் அழைத்தாலோ என்று கேட்கவேயில்லையே என்ற நினைப்பில் சிறிது வருத்தமடைந்தார். இதற்குள் ரூபவதி நான் வருகிறேன் வேலையெல்லாம் சுத்தமாக இருக்க வேண்டுமென கறாராகக் கூறி நகர்ந்தாள்.

பின் நான்காவது நாள் வந்த ரூபவதி வீட்டைப் பார்த்து விட்டு அசந்தேபோனாள். அருமையான முறையில் வர்ணம் பிசிறுல்லாமல் பூசப்பட்டது கண்டு வேலை செய்த எல்லோரையும் மனதார பாராட்டினாள். வீட்டின் தரையெல்லாம் சுத்தம் செய்தது கண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.

தனது ரூமில் வந்து அமர்ந்த ரூபவதி சுதிருடன் வந்த மூன்று பேரை அழைத்து அவர்களுக்கு சேர வேண்டிய தொகையுடன் இனிப்பு மற்றும் புது துணிகள் தந்தாள். மூவரும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல அவர்களைப் புறப்படச் சொன்னாள். அவர்கள் சென்றதும், ரூபவதி அங்கு வந்த கணவருடன் சுதிரை அழைத்து இருவரும் பெரிய வணக்கத்தைத் தெரிவித்தனர்.

சுதிர் அவர்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த போது, ரூபவதி நீங்கள் ராணுவத்தில் நாட்டு மக்களுக்காக உழைத்தவர் என அறிந்தோம். உங்களை மரியாதையாக நடத்தத் தவறி விட்டோம், மன்னித்து விடுங்கள் என்றார்கள். சுதிருக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வரத் தவறிய நிலையில், ரூபவதி ஒரு கவரை சுதிரிடம் தந்து சரி பார்க்கச் சொன்னாள். தொகை சரியாக இருந்ததும் சுதிர் மிகவும் நன்றியெனக் கூற, ரூபவதி வாருங்கள் உங்களை எங்கள் காரில் உங்கள் வீட்டில் கொண்டு விடுகிறோம் என்றதும், சுதிர் வேண்டாமெனக் கூற, இனி நீங்களும் எங்கள் குடும்ப அங்கத்தினர் என்று கூறி சுதிர் வீடு நோக்கி வாகனம் கிளம்பியது.

சுதிர் வீட்டை அடைந்ததும், அவர் மகள் வந்து அப்பா எனக் கட்டியணைத்து உள்ளே அழைத்துச் செல்ல, சுதிர் மனைவி ரூபவதி மற்றும் அவர் கணவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்கள் அமர்ந்ததும், சுதிர் மனைவி அவர்களுக்கு பலகாரங்கள் தந்தாள். பின் சுதிரிடம் தைத்திருநாளுக்கு வேண்டிய துணிகள், இனிப்பு, நம் பெண்ணிற்கு நகை, கரும்பு எல்லாம் இவர்கள் நேற்று கொண்டு வந்தார்கள். நான் எங்கள் கணவருக்குத் தெரியாமல் வாங்க மாட்டேன் என்று கூறியதற்கு, இனிமேல் நீங்களும் எங்கள் குடும்பத்தின் அங்கம் என்றார்கள். மேலும் ராணுவத்தில் நாட்டிற்காக உழைத்தவர் குடும்பத்திற்கு செய்வதை பாக்கியமாகக் கருதுகிறோம் என்றார்கள்.

சுதிர் சிறிது நேரத்திற்குப் பின், தான் வாங்கியிருந்த துணிகள், இனிப்பு மற்றும் பழங்களுடன் ரூபவதியைப் பார்த்து இந்தாருங்கள் தங்கச்சி, இனிமேல் இது உங்கள் வீடு என்று கூறி விட்டு, ராணுவத்தில் நாட்டிற்காக உழைத்தால் என்றுமே பெருமை தான் என்றதும், உண்மை அண்ணா என்று ரூபவதி கூறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *