சிறுகதை

எதிர்பாராதது..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

எப்போது மணி நான்காகும் என்று நகரில் உள்ள பிரதான பூங்காவில் அமர்ந்திருந்தார் சுந்தரராஜன் . வயது அறுபதைக் கடந்து விட்டாலும் அவர் இன்னும் தன்னை இளமையாக வைத்துக் கொள்வார் .ஒரு முடி கூட நரைக்காதது போல் தலையில் டை அடித்து தன்னை இளமையாக காட்டிக் கொள்வதில் கில்லாடி .

திருமணம் ஆகி குழந்தைகள் பேரன் பேத்திகள் என்று வந்த நேரத்தில் அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் கொஞ்சம் கீழே இருக்கும் . காரணம் எந்தப் பெண்ணையும் தன் வலையில் வீழ்த்தி விடலாம் என்பதுதான் ஒவ்வொரு பூங்காவாக அமர்ந்து அங்கு வருபவர்களை நாேட்டமிட்டுக் கொண்டிருப்பார். அங்கு வரும் பெண்களுடன் பேசுவார். அவர்கள் அப்படியே பேச்சைத் தொடர்ந்தால் அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தொடர்ந்து பேசிச் சேட்டைகள் செய்து பின் வேட்டையில் முடிப்பார் சுந்தரராஜன்.

இது ஒரு சில இடங்களில் சாதகமாக அமைந்ததால் இதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டார்.

அன்றும் அந்தப் பூங்காவில் பாேய் அமர்ந்தார் . அப்படியும் இப்படியும் ஆக நடைப்பயிற்சி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார் யாராவது சிக்குகிறார்களா ? யாராவது தனியாக இருக்கிறார்களா ? என்று நோட்டமிட்டார். யாரும் அப்படி தெரியவில்லை என்பது அவருக்கு தெரிந்தது

‘என்ன செய்யலாம் ? இன்றைக்கு ஒன்றும் அகப்

படலையே? என்று வருத்தம்.

‘இல்லை கண்டிப்பாக யாராவது நமக்கு கிடைக்கத்தான் செய்வார்கள். ஒரு நாளும் நாம் எதுவுமில்லாமல் போனதில்லையே ? குறைந்தபட்சம் யாரிடமாவது இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தானே போகிறோம்?என்று அவர் மனதிற்குள் பேசிக்கொண்டார்.

‘சரி அமரலாம் .யாராவது வந்து உட்காருவார்கள் ‘

என்று ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.தன்னுடைய மொபைல் போனை எடுத்து ஏதோ பார்ப்பது போல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்து ஒரு நடுத்தர வயது பெண்ணும் அமர்ந்தார்.

சுந்தரராஜனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

‘நாம என்னவோ நினைத்துக் கொண்டிருந்தோம்.கடவுள் நம் பக்கம் வந்து விட்டார்’, என்று நினைத்த சுந்தரராஜன் அவராக பேசுவதும் அவராகச் சிரிப்பதுமாய் இருந்தார்.

‘என்ன இது ? லூசு மாதிரி அந்த ஆளா பேசுறான். சிரிச்சிட்டு இருக்கான்? என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு அவளும் தன் செல்போனை எடுத்து பார்ப்பது போல் இருந்தாள்.

‘ இந்தப் பெண்ணிடம் எப்படி பேசுவது? எப்படி அவள் நம்பர் வாங்குவது ? என்று ஒரே திகைப்பாக இருந்தது. இன்னும் சிறிது நேரத்திற்குள் நம்பரை வாங்க விட்டால் அவள் இந்த இடத்தை விட்டு சென்று விடுவாள்’, என்று அவருக்கு இதயம் கிடந்து துடித்தது.

“வணக்கம் ” என்று தன் அறிமுகப்படுத்திக் கொண்டார் .

“வணக்கம்” என்று எதிர்ப்பதில் சொன்னாள் அந்தப் பெண்.

“நீங்க என்ன பண்றிங்க? என்று சுந்தர்ராஜன் கேட்க

“நீங்க என்ன பண்றிங்க. முதல்ல சொல்லுங்க”

என்று அந்த பெண் கேட்க,

‘நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கேன் “

என்று சுந்தர்ராஜன் சொல்ல

” நானும் ஒரு கம்பெனி வேலை பாத்துட்டு இருக்கேன்”

பதில் சொன்னாள் அந்தப் பெண்.

அசட்டு சிரிப்பு சிரித்தார் சுந்தர்ராஜன்.

அதே சிரிப்பை உதிர்த்தாள் அந்தப் பெண்.

“இவ சீக்கிரம் முடிஞ்சிருவா போல? என்று தொடர்ந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.

அந்தப் பெண்ணும் சலிக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் போதும் இனி பேச வேண்டியதைச் செல்போனில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து

” உங்க நம்பர் தர முடியுமா? என்று சுந்தரராஜன் கேட்க

“உங்க நம்பர் குடுங்க நானே போன் பண்றேன் ” என்றாள் அந்தப் பெண்.

எப்படி என்றால் என்ன நாமளே நம்பர் கொடுக்கலாம்

என்று தன்னுடைய நம்பரை கொடுத்தார் சுந்தர்ராஜன்; இருந்தாலும் ஒரு சந்தேகம்….

இவ நமக்கு போன் செய்வாளா? என்று உள்ளுக்குள் உறுத்தல் ஏற்பட்டது.

” ஓகே நன்றி . பார்க்கலாம் “

என்று சொல்லிச் சென்றாள் அந்தப் பெண்.அந்தப் பெண் நமக்கு போன் செய்வாளா? மாட்டாளா?

என்று நினைத்த சுந்தராஜனுக்கு சரியாக இரண்டு மணி நேரத்துக்குப் பின் அதே எண்ணில் இருந்து போன் வந்தது

‘‘ஹலோ…’’ என்று எதிர் திசையில் ஒரு பெண் குரல் கேட்க மிகவும் குதூகலம் அடைந்தார் சுந்தர்ராஜன்.

“வணக்கம் சொல்லுங்க. நீங்க போன் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுதான் உங்க போனுக்காக காத்துகிட்டு இருந்தேன்’’ என்று கொஞ்சம் வழிந்து பேசினார் சுந்தர்ராஜன் .

“எனக்கும் அப்படித்தான் எப்படா உங்ககிட்ட போன் பண்ணி பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன்; சொல்லுங்க “

என்று அந்த பெண் சொல்ல

“நீங்க சொல்லுங்க”

என்று மேலும் வழிந்தார் சுந்தர்ராஜன்

” நாம மீட் பண்ணலாமா ? என்று அந்தப் பெண் கேட்க

” அதற்குத்தான் ஆவலோட இருக்கேன்” என்றார் சுந்தரராஜன்.

“சரி இன்னைக்கு சாயங்காலம் வடபழனியில இருக்கிற சாய் கேப்புக்கு வந்துருங்க. அங்க மீட் பண்ணலாம்”

என்று சுந்தரராஜன் சொல்ல

” கண்டிப்பா “

என்று உற்சாக வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடினார் சுந்தர்ராஜன்.

மறுநாள் எப்போது வருமென்று காத்துக் கொண்டிருந்தார். சொன்ன நேரத்தில் போய் அங்கு நின்றார். சிரித்தபடியே அந்தப் பெண் சுந்தர்ராஜனை வரவேற்க

இருவரும் காபி குடித்தார்கள்

” போகலாமா ? என்று கேட்டாள் அந்தப் பெண்

” எங்க என்று ஆர்வமாகக் கேட்டார் சுந்தர்ராஜன் .

எதிர் திசையில் இரண்டு பெண் காவலர்கள் வந்தார்கள்.

” நீங்க தான் எல்லா பொண்ணு கிட்டயும் நம்பர் வாங்கி பேசுறதா? உங்களுடைய வயசு என்ன ? நீங்க செய்ற வேலை என்ன? வாங்க கொஞ்ச நாளைக்கு உள்ள இருங்க. அப்புறம் எல்லாம் சரியா போகும் “

என்று பெண் காவலர் சொல்ல

” இல்லைங்க என்னை விட்டுடுங்க அவமானமா இருக்கு அசிங்கமா இருக்கு” கதறினார் சுந்தர்ராஜன் .

“இதெல்லாம் நீங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்கு முன்னாடியே தெரியணும். இப்போ நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க. அதுக்கான தண்டனையை அனுபவிச்சு தான் ஆகணும் “

என்று கைத் தாங்கலாக சுந்தரராஜனை அழைத்துச் சென்றார்கள் பெண் காவலர்கள்

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் பின்னாலே சென்றார் சுந்தரராஜன்.

இன்னொரு பூங்காவில் சுந்தரராஜன் போலவே ஒரு ஆண் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

சுந்தரராஜனை போலீசில் மாட்டி மாட்டி விட்ட

அதே பெண் அவன் முன்னால் அமர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *