டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை
சென்னை, மார்ச்.1-
மத்திய தோல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில், தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னை தரமணியில் உள்ள மத்திய தோல் பொருள் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், ‘பெருந்தொற்றில் இருந்து அறிவியலுக்கான பாடம்’ என்ற தலைப்பில் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:-
சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிக்கப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் புதிய தொற்றுகள் உருவாகும். அவற்றை சமாளிப்பது சவாலாக இருக்கும். தற்போதைய சூழலில் சுய சார்பு என்பது முக்கியமானது. இந்தியா தனக்கு தேவையான மருந்துகள் தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் வருங்காலத்தில் தனது பிரச்சினைகளை எளிதாக இந்தியா கையாளும்,
இதற்கு உதாரணமாக, காசநோய், எச்.ஐ.வி. போன்ற தற்போது உள்ள நோய் தடுப்பு பணிகள் எதிர்கால தொற்று நோய்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். மேலும் அறிவியல் ஆராய்ச்சியில் தகவல் பரவல், ஒத்துழைப்பு மற்றும் பகிர்வு ஆகிய 2 அம்சங்களும் கொரோனாவை எதிர்க்கொள்ள முக்கிய பங்கு வகித்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் என்.ஆனந்தவல்லி அனைவரையும் வரவேற்றார். இறுதியில், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கே.ஜே.ஸ்ரீராம் நன்றி கூறினார்.