சிறுகதை

எண்ணம் ஈடேறியது – மு.வெ.சம்பத்

சுதாமன் பணியில் சேர்ந்து இன்றுடன் மூன்று வருடம் நிறைவேறிய நிலையில் அவனுக்கு திருமணம் செய்வது குறித்து அவனது தந்தை சிவா மற்றும் தாயார் கமலா அவனிடம் இன்று பேசுவதென முடிவெடுத்தனர்.

சுதாமன் பணியிலிருந்து மாலையில் வந்ததும் கமலா அவனுக்கு சிற்றுண்டி, காபி தந்து விட்டு, மெதுவாக திருமண பேச்சை ஆரம்பித்தாள். சுதாமன் எனக்கு அத்தை மகள் சுனந்தினியை மணக்க விருப்பமென கூறியதும் தாய், தந்தை முகத்தில் பூரண நிலவு வடிவில் புன்னகை பூத்தது.

மறுநாள் சிவாவும் கமலாவும் காலை 10.00 மணியளவில் கிளம்பி சிவாவின் தங்கை கல்யாணி வீட்டிற்குச் சென்றனர். கல்யாணி வந்த அண்ணன், அண்ணியை இன்முகத்துடன் வீட்டினுள் அழைத்து அமர வைத்தாள். பிறகு தனது கணவர் நடராஜனை அழைத்து யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள் என்றாள். நடராஜன் அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு எப்படியிருக்கின்றீர்கள், தம்பி எப்படியுள்ளான் என வினவினார். பிறகு பல விஷயங்களை பேசியபின், சிவா நடராஜனிடம், சுதாமன் சுனந்தினியை மணக்க விருப்பமென நேற்று தான் கூறினான், அதனால் அதை தங்களிடம் தெரிவித்து விட்டு உங்களது விருப்பம் அறியவே வந்துள்ளோம் என்றார் சிவா.

நடராஜனும் கல்யாணியும் தங்களுக்கு பூரண சம்மதம் தான், எதற்கும் சுனந்தினியை அழைத்து அவளது விருப்பத்தையும் கேட்டு விடலாம் என்றனர். சுனந்தினி அறையிலிருந்து வந்து, வாங்க, வாங்க என்று வந்தவர்களை அழைத்து வணக்கம் சொன்னாள்.

நடராஜன் தன் மகளை தனது பக்கத்தில் அமர வைத்து அவர்கள் கூறியதைச் சென்னார். சுனந்தினி சிறிது வினாடிகளில் தனக்கும் சம்மதமெனக் கூறி விட்டு, ஒரு நிபந்தனை என்று கூறினாள்.

உடனே அங்கு ஒரு அமைதி ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்,

சுனந்தினி ‘‘ திருமணம் முடிந்ததும் நாங்கள் தனியாக வாழ விரும்புகிறோம்’’ என்றதும், இதைக் கேட்ட எல்லோரும் திகைத்தனர்.

சிவா சிறிது புன்னகையுடன் தனது மகனிடம் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறி விட்டு கிளம்ப ஆயத்தமான போது கல்யாணி அவர்களை வற்புறுத்தி மதிய உணவு அருந்தச் செய்தாள்.

பின் இருவரும் புறப்பட்டனர்.

மாலையில் வீடு வந்த சுதாமனிடம் சிவா நடந்ததைக் கூறினார். சுதாமன் சிறிது நேரம் யோசித்து விட்டு, பார்க்கலாம் என்று கூறி விட்டு வெளியே சென்றான். மறு நாள் காலையில் சுதாமன் சுனந்தினியை தொடர்பு கொண்டு பேசினான். அவர்களது பேச்சு நிறைய நேரம் நீடித்தது. பின் முடிவில் ஒரு ஒருமித்தக் கருத்து ஏற்பட்டதனால், தொடர்பு துண்டிக்கப்பட்டது. அலுவலகம் செல்லும் முன்பு, சுதாமன் தந்தையிடம் திருமண ஏற்பாடுகளைத் தொடரலாமென ஒரு வார்த்தையில் கூறி விட்டு புறப்பட்டு சென்றான். சிவாவிற்கும் கமலாவிற்கும் என்ன பேச்சு வார்த்தை நடந்ததென அறிய விருப்பம் மேலிட்டாலும் ஏதாவது கேட்கப் போய், அவன் கோபமாகப் பேசி விடுவானோ என்ற பயம் ஏற்பட்டது. பையன் தனிக் குடித்தனம் செல்கின்றானே என்ற வருத்தம் நிறைந்திருந்தாலும் இந்த ஊரில் தானே இருக்கப் போகிறான் என்று தங்களை சமாதானப் படுத்திக் கொண்டனர்.

இரு வீட்டாரும் இணைந்து திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினார்கள். சுனந்தினி விருப்பத்திற்கிணங்க, கமலாவும் சிவாவும் தங்களது பக்கத்துத் தெருவிலேயே வீடு பார்த்து அவர்களை குடியமர்த்தினார்கள். வாரக் கடைசியில் அவர்கள் ஒரு வாரம் சுதாமன் வீட்டிற்கும், மறு வாரம் சுனந்தினி வீட்டிற்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

கமலா வீட்டு வேலையை சீக்கிரம் முடித்துக் கொண்டு சுனந்தினியைப் பார்க்க கிளம்பினாள். வீடு பூட்டியிருந்தது கண்டு பக்கத்தில் வினவ, அவர்கள் சுனந்தினி அம்மா மதியம் 2.00 மணிக்குத் தான் வருவார்கள். பக்கத்திலுள்ள காப்பகத்தில் தான் இருப்பார்கள் என்றனர். அங்குள்ளவர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுத்து அதை விற்று வரும் பணத்தை அந்த காப்பகத்திற்கே அளித்து விடுவார் என்றனர். சேவை மனப்பாங்குடன் இதை செய்கிறார் என்றனர்.

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட கமலா, வீட்டிற்கு வந்து சிவாவிடம் தான் கேட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டாள். சுனந்தினியின் சேவை உரிமையை நாம் பறித்து விடுவோமென்று தான் அவள் தனி வீடு சென்றிருக்க வேண்டும் என கமலா கூறினாள்.

கமலாவும் சிவாவும் நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு யாரிடமும் கூறாமல் தங்களது திட்டத்தைத் தொடங்கினர்.

அன்று தன் மாமியாரைப் பார்க்க வந்த சுனந்தினி வீடு பூட்டியிருப்பதைக் கண்டு பக்கத்தில் விசாரிக்க சில நாட்களாக கமலா மாமி தனது கணவருடன் காலையில் சென்று மாலையில் தான் திரும்புகிறார்கள் என்றனர். சுனந்தினி சிறிது யோசனையுடன் சுதாமனைத் தொடர்பு கொண்டு தான் கேட்ட விஷயத்தைக் கூறினாள். சரி மாலையில் பேசிக் கொள்ளலாம் என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.

சரியாக பத்து நாட்கள் கழிந்து மாலை 6 மணியளவில் கமலா சுதாமனைத் தொடர்பு கொண்டு நாளை விடியற்காலை 4 மணிக்கு காருடன் வீட்டிற்கு வரும்படி பணித்தாள. சுதாமன் சுனந்தினியிடம் இதைக் கூற, எதற்கு இருக்குமென இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

மறுநாள் வந்த இருவரையும் வரவேற்ற கமலா, சுதாமனை நாம் வாங்கியுள்ள மனைக்கு வண்டியை விடச் சொன்னாள். பத்து நிமிட கால அளவில் அந்த இடத்தை அடைந்தனர். பின் சுனந்தினியிடம் நானும் எனது கணவரும் நாங்கள் வாங்கியுள்ள இரண்டு கிரவுண்டு நிலத்தில் ஒரு காப்பகம் கட்டலாமென திட்டமிட்டு அந்த கட்டிடத்தைக் கட்டியுள்ளோம். அதற்கு அருகில் நாமெல்லோரும் வாழ வீடும் கட்டியுள்ளோம். இன்று சின்ன அளவில் பூஜை ஏற்பாடு செய்துள்ளோம் என்று கமலா கூறினாள். காப்பகத்திற்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டுமென சுனந்தினியைப் பார்த்துக் கூறினாள். சுனந்தினி சற்று நேரம் வாயடைத்துப் போய் நின்றவள், சுதாரித்துக் கொண்டு, சரியென்று கூறியதோடு அல்லாமல், நான் சேவை செய்யும் காப்பகத்தையும் இதில் மாற்றி விடலாம் என்றாள்.

பின் கமலா சுனந்தினியிடம் மகிழ்ச்சியா என வினவ சுனந்தினி சுதாமனைப் பார்த்து சீக்கிரம் வீட்டைக் காலி பண்ணி இவர்களுடன் வந்து விடலாம் என்றதும் சிவா கமலாவின் எண்ணம் ஈடேறியது கண்டு அவள் கைகளைக் குலுக்கினார். ‘ ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நம்மையே ‘ என்ற பாடல் அப்போது காற்று வாக்கில் ஒலித்தது கண்டு அங்கிருந்த எல்லோரும் மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *