போஸ்டர் செய்தி

‘‘உள்ளாட்சிகளுக்கான ரூ.2168 கோடியை உடனே வழங்குங்கள்’’ உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வலியுறுத்தல்

Spread the love

புதுடெல்லி, ஜூன்.12–

‘2017–18 மற்றும் 2018–19ம் ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.2,168 கோடியே 18 லட்சத்தை மத்திய அரசு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் மூலம் வர வேண்டிய நிதி உதவி தொடர்பாக அவரிடம் வலியுறுத்தினார்கள்.

மத்திய உள்துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நீங்கள் பல வெற்றிகரமான சாதனைகளை படைப்பீர்கள். மைல்கல்லை உருவாக்குவீர்கள் என்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை ஆக்கப்பூர்வமாகவும், புதிய புதிய வழிமுறைகள் மூலமும் நிறைவேற்றுவதில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணியில் உள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள் என்று அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.

அப்போது முதல்வர் சார்பில் அமித்ஷாவிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்துக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி, உள்ளாட்சிகளுக்கு 2017–18-ம் ஆண்டு வழங்கவேண்டிய செயல்பாட்டு நிதி ரூ.560 கோடியே 15 லட் சம் மற்றும் 2018–19-ம் ஆண்டு 2-ம் தவணையாக வழங்கவேண்டிய அடிப்படை நிதி ரூ.1,608 கோடியே 3 லட்சம் ஆகியவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் விதிகளை தளர்த்தி, 2 லட்சம் பேருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டித்தர அனுமதிக்க வேண்டும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் விடுபட்டுப்போன 8 லட்சத்து 28 ஆயிரத்து 419 பயனாளிகளுடைய விண்ணப்பங்களை நிரந்தர காத் திருப்போர் பட்டியலில் வைத்து அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.

அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., மற்றவர்கள்) 60:40 என்ற சதவீத விதிகளை தளர்த்தி வழங்க வேண்டும்.

* கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு முதலில் கையகப்படுத்த அறிவிக்கப்பட்ட 627.89 ஏக்கர் நிலத்துக்கு பதில், தற்போது ஓடுதளம் அமைக்க 365 ஏக்கராக நிலத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் குறைத்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து தற்போதைய 627.89 ஏக்கர் நில அளவே தொடரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *