போஸ்டர் செய்தி

உலக பேட்மிண்டன் போட்டி: தங்கம் வென்றார் பி.வி.சிந்து

Spread the love

பாசெல், ஆக.26-

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் பி.வி.சிந்து.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார். கடும் சவாலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நஜோமி ஒகுஹரா எந்தவித எதிர்ப்பும் இன்றி சிந்துவிடம் தோற்றார்.

முடிவில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. கடந்த 2017 உலகப் போட்டி இறுதிச் சுற்றில் சிந்து–ஒகுஹரா இடையே நடைபெற்ற இறுதி ஆட்டம் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்தது. அதில் கடுமையாக போராடிய சிந்து கடைசி கேமில் 2 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தும், துரதிருஷ்டவசமாக தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் விளையாடி தனது கனவை நனவாக்கி இருக்கிறார்.

ஐதராாத்தை சேர்ந்த 24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில் வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில் வெள்ளியும் வென்று இருந்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பதக்கங்களை பெற்ற வீராங்கனையான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து சமன் செய்தார்.

பிரகாஷ் பதுகோன் கடந்த 1983ல் வெள்ளியும், சாய்னா நெவால் 2015ல் வெண்கலம், 2017ல் வெள்ளியும், வென்றிருந்தனர்.

தற்போது 2019-ல் சிந்து தங்கம், பிரணீத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

பயிற்சியாளர் பேட்டி

இந்த ஆட்டதை நேரில் கண்டு களித்து அவ்வப்போது ஆலோசனை வழங்கிய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ‘முந்தைய இரண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், சிந்து கடுமையான சுற்றுகளை விளையாடிய பிறகு இறுதி ஆட்டத்திற்கு வந்ததால் களைப்படைந்தது போன்று தெரிந்தது. ஆனால் இந்த உலக போட்டியில் அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. நீண்ட நேரம் இடைவிடாது பந்தை திருப்பி அடிக்கும் வகையில் ஆடுவது அல்லது அதிரடியான ஷாட்டுகளை தொடுப்பது என்ற இரண்டு விதமான திட்டங்களுடன் சிந்து களம் இறங்கினார். சிந்து முதல் புள்ளியில் இருந்தே அதிரடியாக ஆடியதற்கு பலன் கிடைத்திருக்கிறது. இந்த தங்கப்பதக்கம் நிச்சயம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இனி அவரது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வது தான்’ என்றார்.

பதக்கம் தாயாருக்கு சமர்ப்பணம்

உலக பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிறகு சிந்து நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது தேசத்திற்காக இந்த பதக்கத்தை வென்றுள்ளேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கடந்த இரண்டு உலக பேட்மிண்டன் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தேன். இந்த நிலைமையை இப்போது மாற்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.இந்த தருணத்திற்காகத் தான் நீண்ட காலமாக காத்திருந்தேன். ஒரு வழியாக இப்போது உலக சாம்பியன் ஆகிவிட்டேன். எனது பயிற்சியாளர்கள் கிம், கோபிசந்த், உதவியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கத்தை எனது தாயார் விஜயாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருக்கு இன்று (நேற்று) பிறந்த நாள். பிறந்தநாள் பரிசாக இதை வழங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

வரலாறு படைத்த சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், ‘உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். இது ஒட்டுமொத்த தேசத்தின் பெருமைமிக்க தருணம். சிந்துவின் கடின உழைப்பு, விடா முயற்சி இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.

மிகச்சிறந்த திறமை வாய்ந்த பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று நம் நாட்டுக்கு பி.வி.சிந்து பெருமை சேர்த்துள்ளார். தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் இந்த வெற்றியை அவர் சாத்தியமாக்கி உள்ளார். இதன் மூலம் அனைத்து பெண்களுக்கும் தன்னை ஒரு முன்மாதிரியாக வெளிப்படுத்தியுள்ள சிந்து, அவரது பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். விளையாட்டில் இளம்தலைமுறையினர் சிறந்து விளங்க பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் உள்பட தலைவர்கள் பலரும் சிந்துவின் சாதனையை பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *