சிறந்த டிரைவர்களில் ஜப்பான் முதலிடம்
லண்டன், பிப். 23–
உலக நாடுகளில் மோசமாக வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் கொண்ட நாடுகளில், இந்தியா 4 வதாக இடம் பெற்றுள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் போக்குவரத்திற்கு வாகனங்கள் அத்தியாவசியமானதாக மாறியுள்ளன. இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. தொடக்கத்தில் வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் இருப்பதே அரிதாக இருந்த நிலையில், தற்போது ஆளுக்கு ஒரு இருசக்கர வாகனம் என்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆளுக்கொரு கார் என பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன் அனுபவமற்ற அல்லது அஜாக்கிரதையான ஓட்டுனர்களால் நாள்தோறும் உலகம் முழுவதும் ஏராளமான வாகன விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்படுகின்றன.
சிறந்த வாகன ஓட்டிகள்
இதனையொட்டி லண்டனை தலைமையகமாக கொண்ட ‘கம்பேர் தி மார்கெட்’ என்ற காப்பீடு நிறுவனம், உலகிலேயே மோசமான ஓட்டுனர்களை கொண்ட நாடுகள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி வாகன விபத்துகள், அதற்கான காரணங்கள், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ஆகியவற்றை கணக்கிட்டு மோசமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான வாகன ஓட்டுனர்களை கொண்ட நாடாக தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மோசமான ஓட்டுனர்களை கொண்ட நாடாக இந்தியா 4 வது இடத்திலும் மலேசியா 5 வது இடத்திலும் அமெரிக்கா 7 வது இடத்திலும் கனடா, பிரேசில் 9, 10 வது இடத்திலும் உள்ளது.
அதேபோல சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ஜப்பானும், இரண்டாவது இடத்தில் நெதர்லாந்தும், 3 வது இடத்தில் நார்வேயும், 5 வது இடத்தில் சுவீடனும் உள்ளன. ஆஸ்திரியா 6வது இடம், சிங்கப்பூர் 9 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.