செய்திகள்

உலகிலேயே மகாராஷ்டிரா சந்திராபூர் நகரில் அதிகபட்சம் 118 டிகிரி வறுத்தெடுத்த வெயில்

நாக்பூர், மே. 29–

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உலகிலேயே அதிக பட்சமாக 47.8 டிகிரி செல்சியஸ் – அதாவது 118.04 டிகிரி வெயில் கொளுத்தி இருக்கிறது. நாக்பூரில் 47.5 டிகிரி செல்சியஸ் அதாவது 117.05 டிகிரி வெயில் அடித்து இருக்கிறது.

கடந்த காலங்களில் 2013–ம் ஆண்டு மே 23–ம் தேதி நாக்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 118.22 டிகிரி பதிவாகி உள்ளது

இதேபோல உலகில் அதிக அளவில் வெயில் அடித்து இருக்கும் முதல் 15 இடங்களில் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா (5–வது இடம்), வார்தா நகரமும் (9–வது இடம்) இடம் பெற்றுள்ளது.

ராமகுண்டம் நான்காவது இடத்திலும், அடிலாபாத் 11வது இடத்திலும் வந்துள்ளது. இரு நகரங்களும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளன. அடுத்து 12வது இடத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாண்டா நகர் வந்துள்ளது.

கொளுத்திய வெயிலில் இந்த நகரங்களில் மக்கள் தவியாய்த் தவித்துப் போனார்கள். பிற்பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. தார் ரோடு உருகும் நிலையில் இருந்தது. வீட்டுக்குள் முடங்கிய மக்கள் மாலையில் வெளியே வர ஆரம்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *