செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: ஜோ பிடன் எச்சரிக்கை

நியூயார்க், மார்ச் 2–

உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது.

அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பிடன் பேசினார். அப்போது, உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும். அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளான நேட்டோ கூட்டமைப்புடன் இணைந்து, முழு ஆற்றலுடன் உக்ரைனை பாதுகாக்கும் என உறுதியளித்த அவர், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை தைரியமாக எதிர்கொண்ட உக்ரைன் மக்களை வெகுவாக பாராட்டினார்.

அதிகவிலை கொடுக்க நேரிடும்

அதோடு, போர்க்களத்தில் புதின் ஆதாயங்களை பெறலாம், ஆனால் அதற்கு ரஷ்யா நீண்ட காலத்திற்கு, அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். மேலும், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள அத்துமீறிய போர் நடவடிக்கைகளை கண்காணிக்க அமெரிக்கா சிறப்பு குழுவை அனுப்பவுள்ளதாக கூறிய அவர், அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

உக்ரைனில் ரஷ்ய படைகளுடன் அமெரிக்கப் படைகள் மோதாது என குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொகுசு படகுகள் மற்றும் குடியிருப்புகள் முடக்கப்படும் என கூறினார். மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யாவின் ராணுவ டாங்கிகள் சுற்றிவந்தாலும், உக்ரைனிய மக்களின் இதயங்களையும், அன்பையும் புதினால் ஒருபோதும் பெற முடியாது என அதிபர் ஜோ பிடன் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published.