செய்திகள்

உக்ரைன் போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ள ரஷ்ய ராணுவம்

அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

நியூயார்க், ஏப். 30–

உக்ரைன் போரில், ரஷ்யா டால்பின்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

விளாடிமிர் புட்டினின் ரஷ்ய ராணுவம் டால்பின்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, கருங்கடலின் கடற்படை தளங்களை கண்காணிக்க அனுப்பியுள்ளது. கடல் வழியிலிருந்து எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்க செவஸ்டோபோல் துறைமுகத்தின் நுழைவு வாயிலில், ரஷ்யா டால்பின்களை நிறுத்தியுள்ளது என என்பிசி செய்தியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்க கடற்படை நிறுவனத்தின் (USNI) செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

டால்பின்கள் பயன்பாடு

இந்த துறைமுகம் 2004 ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதலின் தொடக்கத்தில், ரஷ்யா டால்பின்களை அதன் கடற்படை தளத்திற்கு மாற்றியது என்றும் அமெரிக்க கடற்படை நிறுவனம் கூறுகிறது.

உக்ரேன் நாட்டு கடல் படையினர் கடலுக்குள் நுழைய முயன்றால், நொடியில் கொன்றுவிடும் வகையில் ராணுவ பயிற்சி பெற்ற இந்த டால்பின்கள் பணியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த டால்பின்கள் நீருக்கடியில் எதிரியின் ஒலி மற்றும் வீச்சு ஆகியவற்றைக் கண்டறிய முடியும் என்று ரஷ்ய செய்தி நிறுவன ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே தனது தளங்களைப் பாதுகாக்க டால்பின்களை நிலைநிறுத்தியுள்ளது. 2018 இல் வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சிரியாவின் டெர்டஸில் உள்ள கடற்படை தளத்தில் ரஷ்யா டால்பின்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.