ஆர். முத்துக்குமார்
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கைகள் அரங்கேறி ஒரு வருடமாகி விட்ட நிலையில் அந்தப் போர் பதட்டம் அடங்கிட யார் நடவடிக்கை எடுப்பது? என்ற சிக்கலில் உலகமே விடை தெரியாமல் திணறுவதை அறிவோம்.
அமெரிக்காவின் உத்தரவின் காரணமாக நாட்டோ நாடுகள் உக்ரைனை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் ரஷ்யாவை நட்புணர்வோடு அணுகி பேச வழியில்லை.
அனேக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் சர்வாதிகார போக்கால் ரஷ்யாவை நெருங்கிட முடியாது தவிக்கிறார்கள்.
ஐ.நா., உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச விளையாட்டு அமைப்புகள் என எல்லா உலகளாவிய அமைப்புகள் ரஷ்யா மீது தடைகள் அறிவித்தும் இருப்பதால் நட்பு பேச்சு வார்த்தைகளுக்கு வழியே கிடையாது.
மொத்தத்தில் ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் தான் ரஷ்யாவுடனும் உக்ரைனுடனும் சமாதான தூதுப் பேச்சுகளுக்கு வழி காண முடியும். அதை தற்போது அமெரிக்காவும் புரிந்து கொண்டு இந்தியா இது சார்ந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு விட்டது!
‘‘ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும்’’ என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வந்திருந்தபோது, அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இன்றைய யுகம் போருக்கானது அல்ல. இதுகுறித்து நான் ஏற்கெனவே பேசியுள்ளேன். அமைதிப் பாதையில் எப்படி செல்லலாம் என்பதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளன’’ என தெரிவித்தார். இதே கருத்தை உஸ்பெகிஸ்தான் சாமர்கண்ட் நகரில் நடந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தோனேஷியாவின் பாலித் தீவில் ஜி-20 கூட்டறிக்கையில் இந்த கருத்து இடம் பெற்றிருந்தது. பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை உலக நாடுகள் வரவேற்றன. நாம் தற்போது ஜி20 அமைப்பின் தலைமையில் இருக்கிறோம். உலக பணக்கார நாடுகளின் உலகளாவிய வர்த்தகம் தடைபட்டு பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டி வளரும் பொருளாதாரங்களின் தவிப்பையும் சுட்டிக்காட்டி உக்ரைன் போர் பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க இனியும் நாம் தயங்க கூடாது.
எஸ்சிஓ, பிரிக்ஸ் அமைப்புகளின் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து ரஷ்ய அதிபர் புதினையும் பங்கேற்க சொல்லி மனம் விட்டு பேசி ஏதேனும் தீர்வு பற்றிய நல்ல செயல் திட்டத்தை ஆலோசிக்கலாம்.
நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்திய பொருளாதாரமும் ஜூன் மாத வாக்கில் மிகப்பெரிய சவாலை அல்லவா சந்திக்க நேரிடும்.
உக்ரைன் போர்ப்பதட்டம் தணிய புதினுடன் பேச இந்தியா தயாராகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.