லக்னோ, மார்ச்.3-
இந்தியாவின் ஆற்றல் உயர்ந்து வருவதால்தான் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க முடிந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
பாரதீய ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
கடைசி 7-வது கட்ட தேர்தல், 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் சோன்பத்ரா மாவட்டத்தில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
போர் நடந்து வரும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவின் ஆற்றல் அதிகரித்து வருவதால்தான் அவர்களை மீட்க முடிந்தது.
இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதில் எந்த முயற்சியையும் விட்டுவிடமாட்டோம். நமது ராணுவத்தின் துணிச்சலையும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தையும் சில எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அந்த கட்சிகளால், இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.