செய்திகள்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை 3 நாளில் மீட்க விமானப்படை தீவிரம்

கீவ், மார்ச் 2–

உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கீவ் நகரிலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டதாகவும், அவர்களை 3 நாட்களில் மீட்க இந்திய விமானப்படையின் 26 விமானங்கள் புறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ஏழாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது ரஷ்யா.

இதனிடையே ரஷ்யாவின் தாக்குதலால் நேற்று கார்கிவ் நகரில் ஆளுநர் மாளிகைக்கு அருகே உணவு வாங்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அங்குள்ள மற்ற மாணவர்களையும், இந்தியக் குடிமக்களையும் பாதுகாப்பாக மீட்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ரஷ்ய, உக்ரைன் தூதர்களுக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. அதோடு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நான்காவது உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

26 விமாங்கள் ஆயத்தம்

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, அனைத்து இந்தியர்களும் உக்ரைனின் கீவ் நகரிலிருந்து வெளியேறிவிட்டனர். “கார்கிவ், சுமி மற்றும் பிற பகுதிகளில் இருப்பவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த மூன்று நாட்களில், இந்தியக் குடிமக்களை அழைத்து வர 26 விமானங்கள் உக்ரைன் செல்லவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்திய விமானப்படையின் C-17 போக்குவரத்து விமானம் உக்ரைனிலிருந்து இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதற்காக ருமேனியாவுக்குப் புறப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 400க்கும் அதிகமானோர் பயணிக்க முடியும். இந்த விமானம் இன்று காலை புறப்பட்டுச் செல்லும்போது, அதில் உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பப்பட்டன.

இதனிடையே நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டார். இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.