செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூலை 8–

கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது

கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்க ஜனாதிபதி ஜோ பிடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள இலங்கை, பூடான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீங்கள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டால், கொரோனா வைரஸ் நோய்க்கு ஆளாவது மற்றும் கடுமையான அறிகுறிகளை உருவாக்குவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும். இருந்தபோதிலும் நீங்கள் எந்த ஒரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன்பு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வது அவசியம் ஆகும்.

அந்த வகையில் தற்போது இலங்கை, பூடான், போட்ஸ்வானா, காங்கோ குடியரசு, மலாவி, ருவாண்டா, சியரா லியோன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகள் கொரோனா பாதிப்பில் அதிக ஆபத்துள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய இந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொண்டால் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே மேற்கூறிய 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *