செய்திகள்

இலங்கையில் சீன ராணுவ நடமாட்டமா? அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தா மறுப்பு

கொழும்பு, நவ. 6–

இலங்கையில் சீன ராணுவத்தினர் யாரும் இல்லை என்று, அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீன ராணுவம் உள்ளதாக, பரபரப்பு ஏற்பட்ட சூழலில், இது தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தா முக்கிய விளக்கத்தைக் கொடுத்து உள்ளார். இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தா, சீன ராணுவத்தினர் இலங்கையில் இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது. சீன ராணுவத்தினர் பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் உள்ளதாகவும் இதனால் இந்தியா தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சீன ராணுவம் இல்லை

உண்மையில் இந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் தொடர்பு இல்லை. அரியாலை கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்திற்குச் சீனர்கள் வந்து இருந்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். குறிப்பாக, சீனர்கள் வேறு யாரும் வடக்கில் கடல் அட்டை செயல்பாடுகளில் கூட ஈடுபடவில்லை.

இந்தியாவும் சரி சீனாவும் சரி கடல் அட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளேன். இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் எனக் கூறுவேன்” என்று கூறி உள்ளார்.

இலங்கையில் சீனர்கள், குறிப்பாகச் சீன ராணுவத்தினரின் நடமாட்டம் உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அந்நாட்டு அமைச்சரின் இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *