செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, செப்.15-

வருகிற 24-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ள இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி வருகிற 24-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு ஒரு மணிநேரம் ஆன்லைனில் நடக்கும்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என4 கட்டங்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒருநாளைக்கு ஒரு பாடம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு முன்பாக மாதிரி தேர்வு ஒன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வருகிற 19, 20-ந்தேதிகளில் மாதிரி தேர்வு நடைபெறும். இந்த நாட்களில் பங்கு பெறாதவர்கள் 21-ந்தேதி நடக்கும் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வு ஒவ்வொரு பாடத்திலும் 4 அலகுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அதற்கேற்றவாறு மாணவர் கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வில் 40 வினாக்கள் கேட்கப்படும். அதில் 30 வினாக்களுக்கு பதில் அளிக்கவேண்டும். அவை கொள்குறி வகை வினாக்களாக (மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்) இருக்கும்.

லாக்கின் ஐ.டி., பாஸ்வேர்டு மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் அனுப்பிவைக்கப்படும். தேர்வு முடியும் வரை அலுவலக பணியாளர்கள், மண்டல அதிகாரிகள், தேர்வு கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். தேர்வு நேரத்தில் ஏதேனும் கேள்விகள், சிக்கல்கள் (மின்சார துண்டிப்பு, மோசமான இணையதள வசதி, கணினி பிரச்சினை) இருக்கும்பட்சத்தில் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

லேப்டாப், செல்போன், டேப் மற்றும் வெப் கேமிரா, மைக்ரோபோன் ஆகியவற்றை மாணவர்கள் தேர்வு நடைபெறும் ஒரு மணிநேரத்துக்கு சரியாக இயங்கும் வகையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவல் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *