சிறுகதை

இறுதிப் புன்னகை | முகில் தினகரன்

அந்த ஷாப்பிங்க காம்ப்ளெக்ஸிலிருந்து வெளியேறி இரண்டு கைகளிலும் பெரிய பைகளுடன் தனது இரண்டு சக்கர வாகனத்தை நோக்கி நடந்தான் செந்தில். அவனை உரசிக்கொண்டு வந்து நின்றது ஒரு கார்.

ஒரு கணம் தடுமாறியவன் மெல்லச் சுதாரித்து கோப வார்த்தைகளில் அவன் திட்டினான்.

அப்போது திடீரென அந்தக்காரின் பின்புறக்கதவு திறக்கப்பட்டது.

‘யாராயிருக்கும்..? ஒரு வேலை தெரிந்தவர்களோ..?’ என அவன் யோசித்த விநாடியில் காரினுள்ளேயிருந்து இரண்டு முரட்டுக்கரங்கள் மின்னல் வேகத்தில் வெளிப்பட்டு அதே வேகத்தில் அவனை சட்டென்று உள்ளிழுத்துப்போட கார் வேகம் பிடித்துப் பறந்தது.

‘‘டேய்.. யாருடா..? யாருடா.. நீங்க.. என்னை எங்கேடா.. கூட்டிட்டுப்போறிங்க..? சொல்லுங்கடா.. சொல்லுங்கடா.. காரின் பின் சீட்டில் குப்புறக் கிடந்த செந்தில் கத்தினான். தன்னைக் கடத்துபவர்கனை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டி அவன் நிமிர முயற்சித்தான்.

அப்போது அவசரமாய் அவன் கண்கள் கருப்புத்துணி கொண்டு கட்டப்பட்டன.

‘‘டேய்.. டேய்.. சொல்லுங்கடா ..நீங்க யாருடா..? என்னைய எதுக்குடா கடத்திறீங்க..? பரிதாபமாய்க் கெஞ்சினான் செந்தில்.

அவனது கெஞ்சலுக்கு கடத்தல்காரர்களிடமிருந்து எந்தவித பதிலும் வர வில்லை.

‘‘எனக்குத் தெரிஞ்சு.. போச்சு நீங்கெல்லாம் வடக்கேயிருந்து வந்திருக்கிற தீவிரவாதிக தானே..? சொல்லுங்க..’’ என்று கத்தினான்.

‘‘ச்சூ.. சத்தம் போடதே..’’என ஒரு கரகரக்குரல் அவனை அடக்கியது.

‘‘ஓ.. தமிழ்தானா..?’’ என்ற செந்தில் சட்டென தன் தொனியை மாற்றிக்கொண்டு ‘‘அய்யா.. யாருய்யா.. நீங்க..? உங்களுக்கு என்ன வேணும்..? எதுக்காக என்னைக் கடத்திட்டுப் போறீங்க..? நீங்க நெனக்கற மாதிரி நானெல்லாம் வசதியான மேல் தட்டு வர்க்கத்து ஆளல்ல .. சாதாரண மிடில் கிளாஸ் ஆளு.. என்னை கடத்திட்டுப்போய் அஞ்சு லட்சம்.. பத்து லட்சம்.. சம்பாதிக்கலாம்னு கனவு காணாதீங்க.. என்னை வெய்யில்ல போட்டு உரிச்செடுத்தாலும் அதிக பட்சம் ஐயாயிரம் தேறும். அவ்வளவு தான்.. அந்த அற்பத் தொகைக்காகவா நீங்க என்னைக்கடத்திறீங்க..?’’ அப்பாவியாய்க் கேட்டான் செந்தில்.

‘‘டேய் நீ.. வாயை மூடிக்கிட்டு வர மாட்டியா..?’’ யாரோ ஒருவன் அதட்டலாய்ச் சொல்லி அவன் முதுகில் எதையோ வைத்து அழுத்த அதன் சூர்மையை உணர்ந்து அது ஒரு கத்தி என்பதைப் புரிந்து கொண்டு தன் வாயை இறுகச்சாத்திக்கொண்டான் செந்தில்.

ஆனால் மனசு மட்டும் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் குழந்தையை எண்ணி சோகத்தில் ஆழ்ந்தது.

‘அய்யோ?? என்னைக் காணாம என் குடும்பமே தவிக்குமே.. சாயந்திரம் ஆனாலே என் குழந்தை அப்பா.. அப்பா..ன்னு கேட்டுட்டு நான் வரும் வழியையே பார்த்திட்டு உட்கார்ந்திட்டிருக்குமே!’ என்று தவித்தான் துடித்தான் வேதனையில் உருகினான்.

தன் முதுகில் அழுத்திக்கொண்டிருந்த அந்தக்கூரான ஆயுதம் சற்று தளர்ந்திருக்க மீண்டும் தன் கெஞ்சல் பேச்சைத் துவக்கினான்.

‘‘அய்யா.. நீங்க யாரு.. எவரு..?ன்னு எனக்குத்தெரியாது.. ஆனா.. நிச்சயம் உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.. அதனால உங்களுக்கு என்னோட வேதனை கண்டிப்பா புரியும் பாவம் என் மகள்.. இரண்டரை வயசுதான் ஆகிறது சாயந்திரம் ஆனா.. என்னை எதிர்பார்த்துக்கிட்டு காத்துக்கெடக்கும் லேட்டாக லோட்டாக அது அப்படியே சோகமாய்டும்.. என் முகத்தைப் பார்க்காம பேசாம அது கூட விளையாடாம இருக்கவே முடியாது.. என் மகள் தான் எனக்கு உலகமே ; நான் தான் அவளுக்கு உலகமே..’’

செந்திலின் அந்தப்பேச்சிற்குப்பிறகு அவர்களிடமிருந்து எந்த விதமான அதட்டலும் உருட்டலும் மிரட்டலும் வாதிருக்க தன்னுடைய அந்த செண்டிமெண்ட் பேச்சு அவர்களை உருக்கிவிட்டது போலும் என்றெண்ணியவன் சற்று தைரியமாகி தன் பேச்சைத்தொடர்ந்தான்.

‘‘அதே மாதிரி தான் என் மனைவியும் என் மேல உயிரையே வெச்சிருக்கா.. நான் இல்லாம அவளால ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது இந்த மாதிரி நான் கடத்தப்பட்டுட்டேன தெரிஞ்சா ஹார்ட் அட்டாக்கே அவளுக்கு வந்தாலும் வந்திடும் அவளுக்கு அதானல அதனால அழுகைக்குரலை வெளிப்படுத்தினான். அதனால..? என்னை விட்டுடுங்க ப்ளீஸ். நான் குடும்பஸ்தன்.. பந்த பாசங்களுக்கு அடிமையாகிக்கெடக்கற பாசக்காராப்பயல். ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்கா இல்லாட்டாலும் என் குழந்தைக்காக ; என் மனைவிக்காகவாது என்னைய விட்டுடுங்க..என்று தழுதழுத்த குரலில் கெஞ்சினான்.

கடத்தல்காரர்களிடம் கான்கிரீட் அமைதி. சென்டிமென்டை பேசினா.. தப்பித்துவிடலாம் என செந்தில் போட்ட கணக்கு பொய்த்துப்போய் விட இதற்கு மேல் இனி எதைப் பேசினாலும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்து மெளனமானான். மனம் தாறுமாறாய்ச் சிந்திக்க ஆரம்பித்தது.

‘இவனுகல்லாம் எந்த வகை ஆட்கள்..? பணம் பறிப்பதற்காக ஆளைக்கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களா.? மதவெறியர்களா..? இல்லை நக்ஸலைட்டுகளா..? கடவுளே.. நீதான் இவனுகளிடமிருந்து என்னைக் காப்பாத்தணும்.. நான் உயிரோட திரும்பிப்போய் என் குடும்பத்தோட சேர நீதான் அருள் புரியணும் ஆண்டவா..?’’ என்று தன் வாழ்நாளில் சென்ற நிமிடம் வரை எந்த தெய்வத்தையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்து விட்ட செந்தில் இப்போது எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தான்.

நேரம் அதிகமாக அதிகமாக அவனது பயமும் அதிகரித்துக் கொண்டே போனது அதை விளைவாய் அவன் மதங்களைத் தாண்டி ஏசு.. அல்லா.. என்று அடுத்த மதங்களின் தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்தான். ஒரு மணி நேர சீரான ஓட்டத்திற்குப் பிறகு கார் ஓரிடத்தில் நின்றது.

‘‘ம்.. கீழே இறங்கு..’’ என மீண்டும் அந்த அதட்டல் குரல்

கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே காரிலிருந்த இறக்கப்பட்ட செந்திலை இரு புறமும் இருவர் பிடித்து நடத்திச்செல்ல யோசனையுடன் நடந்தான்.

‘இது எந்த இடமாயிருக்கும்.. இவனுக என்னை எங்க கொண்டு போறானுக..? காத்து பலமா வீசுறதைப்பார்த்தா.. இது ஊருக்கு வெளிய இருக்கற ஏதோ ஒரு சவுக்குத்தோப்பு போலத்தெரியுது.. ஒரு வேளை சவுக்குத்தோப்புக்கு நடுவுல ஏதாச்சும் தனி பங்களா இருக்குமோ..! அங்கதான் கொண்டு போறானுகளோ..? கொண்ட போய் என்ன பண்ணுவானுக.. அடிச்சு சித்ரவதை பண்ணுவானுகளோ..?’என நினைக்கும போதே அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

பத்து நிமிட நடைக்குப்பின் அவன் ஒரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டான்.

‘‘ம்..’’ அவன் கண்கட்டை அவிழ்த்து விடுங்க.. யாரோ எங்கிருந்தோ கட்டளையிட கண்கள் திறந்து விடப்பட்டன .இருகைகளாலும் கண்களைக் கசக்கியபடியே விழிகளை மெல்லத் திறந்தவன் எதிரே நின்றிருப்பவரைப்பார்த்து அதிர்ந்தான்.

‘‘அ..ம்..மா..’’

பத்து மாதம் அவனைச் சுமந்திருந்து பெற்றவள்..

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தவள்..

வித்தகனாய் கல்வி பெற வைத்தவள்..

மேதினியில் அவனை வாழச்செய்தவள்..

‘‘அம்மா.. நீ.. நீ.. எப்படி இங்கே..?’’ என்று கேட்டவாறே தன்னைக்கொண்டு வந்தவர்களை அவன் திரும்பிப்பார்க்க வயதில் சற்றுப்பெரியவரான ஒருவர் அவனை நெருங்கி வந்து அவன் தோளைத்தொட்டு

‘‘தம்பி முதல்ல.. நீ.. எங்களை மன்னிச்சிடு.. நீ நெனச்ச மாதிரி நாங்க ஒண்ணும் கடத்தல்காரர்கள் இல்லை.. தீவிரவாதிகளும் இல்லை..’’ என்றார்.

செந்தில் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அந்த இடத்தை ஆராயும் விதமாய் சுற்றும் முற்றும் பார்க்க

‘‘குழப்பமடையாதே.. தம்பி இது அன்னை கஸ்தூரிபாய் முதியோர் இல்லத்தோட இன்னொரு பிரான்ஞ்ச்..’’என்றார்

முழுவதுமாய் அச்சம் நீங்கிய செந்தில் அங்கிருந்த எல்லோரையும் தைரியமாய் நேர்ப்பார்வை பார்க்க ஆரம்பித்தான்.

‘‘தம்பி ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி.. நீங்க உங்ள அம்மாவை எங்களோட டவுன் பிரான்ஞ்ச்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டுட்டுப் போனிங்க.. அத்தோட சரி. அதுக்குப்பிறகு நீங்க அவங்களைப் பத்தி நினக்கவுமில்லை.. வந்து பார்க்கவுமில்லை. தொலைஞ்சது சனியன் என்கிற மாதிரி அப்படியே விட்டுட்டீங்க. அப்படித்தானே..?’’ அந்தப் பெரியவர் தலையைச் சாய்த்துக்கொண்டு கேட்டார்.

‘‘அது வந்து..’’ என்று திக்கித் திணறிய செந்தில்

‘‘நான்.. தான்.. மாசாமாசம் இல்லத்துக்கான கட்டணத்தை கரெக்டா அனுப்பிச்சிடறேனே..’’ அவசரமாய்ச் சொன்னான்.

‘‘போதுமா..? அது மட்டும் போதுமா..? சொல்லுங்க..’’

செந்தில் மலங்க மலங்க விழிக்க

‘‘தம்பி கார்ல.. வரும் போது நீங்க.. என்னென்ன சொன்னீங்க..? உங்க குழந்தை சாயந்திரமானா உங்களுக்கா வழி மேல விழி வெச்சுக் காத்திட்டிருக்கும் ; உங்களைப் பார்க்காமா அது ஒரு நாள் கூட இருக்காது.. அதுக்கு நாந்தான் உலகமேன்னு தானே சொன்னீங்க..?’’

தலையை மெல்லமாய் மேலிருந்து கீழ் ஆட்டினான் செந்தில்

‘‘இந்த வயதான குழந்தையும் அப்படித்தான் தம்பி.. உன்னைப் பார்க்கறதுக்காக ஒன்றரை வருஷமா.. வழி மேல விழி வெச்சுக் காத்திட்டிருந்தது.. இதுக்கும் நீதான் தம்பி உலகம்.. வருஷக் கணக்குல உன்னைப் பார்க்காம இந்த ஜீவன் தவிச்ச தவிப்பு அழுத அழுகை விட்ட கண்ணீர் எங்களுக்குத்தான் தம்பி தெரியும்..’’என்று சொன்னார்.

செந்தில் திரும்பி தன் தாயைப் பார்த்தான் அவள் விழிகளில் மகனைப் பார்த்து விட்ட சந்தோஷம் தெரிந்தது. அதே நேரம் ஏதோ இனம் புரியாதவொரு வேதனை அம்மா முகத்தில் இறுக்கமாய் ஒட்டியிருந்தது.

‘‘தம்பி உங்க.. அம்மா எத்தனையோ முறை கேட்டாங்க.. எனக்கு என் மகனைப் பார்க்கணும் போலிருக்கு அவனை வரச் சொல்லுங்க.. வரச்சொல்லுங்க..ன்னு. நாங்களும் உங்களுக்குப்போன் பண்ணிச்சொன்னோம்.. நீங்க.. இதோ வர்றேன் அதோ வர்றேன்னு பூச்சாண்டி காட்டிட்டு ஏனோ வராமலே இருந்திட்டீங்க.. இப்ப நிலைமை ரொம்ப சீரியஸாயிடுச்சு தம்பி உன்னைப் பெத்தவ உன்னைப் பார்த்தே தீரணும் அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சாப்பிட மாட்டேன்னு ஒரு வாரமா உண்ணாவிரதமிருக்க மாத்திரை மருந்து எதையுமே தொடவே இல்லை..இப்படியே விட்டா.. அவள் உடல் நிலை மோசமாயிடும் போலத் தெரிஞ்சுது.. அதான் எங்களுக்கு வேற வழி தெரியலை இப்படியொரு கடத்தல் நாடகத்தை நடத்தி செஞ்சது தப்பாயிருந்தா தயவு செய்து எங்களை மன்னிச்சிடுங்க தம்பி..’’என்று அந்தப் பெரியவர் இரு கைகளாலும் செந்திலைக் கும்பிட்டுச் சொல்ல மனம் கனத்துப்போன செந்தில் அவர் கைகளைப் பற்றிக் கீழிறக்கி விட்டுவிட்டு

‘‘அம்மா..’’ என்று கத்திக்கொண்டு தன் தாயை நோக்கி ஓடினான். இவன் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அந்த சுருக்க முகத்தில் இறுக்கம் தொலைந்து ஒரு களிப்பு விரிந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

விழிகள் விரிய உதடுகள் துடிக்க அவள் இரு கைகளையும் நீட்டி மகனைத் தழுவிக்கொண்டாள். அப்போது அவர்களின் அருகே வந்த அந்தப் பெரியவர்

‘‘தம்பி.. உங்க கையால இந்தச் சாப்பாட்டை அவங்களுக்கு ஊட்டி விடுங்க.. ஏன்னா.. மூணு நாளைக்கு மேலாச்சு அவங்க சாப்பிட்டு..’’ என்று சொல்லி தன் கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை அவனிடம் தந்தார்.

நிலாக்காட்டி தனக்குச்சோறு ஊட்டிய தாய்க்கு தன் அன்பைக் காட்டி சோறு ஊட்டினான் தனயன்.

புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் விழுங்கிய தாய் அந்தப் புன்னகையையே தன் இறுதிப் புன்னகையாக்கித் தலையைச் சாய்த்தாள்.

அ..ம்..மா..

செந்திலின் கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டும் தெறித்துப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *