சினிமா செய்திகள்

இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்

ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்

சென்னை, ஏப்.30–

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், முன்னணி இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வந்தார். அவருக்கு வயது 54. இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இதனயடுத்து இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிக்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். 2வது டோஸ் போட காத்திருந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கே.வி.ஆனந்தின் உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. 5 நிமிடங்கள் மட்டுமே இல்லத்தின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனம் நின்றது. ஆம்புலன்சின் உள்ளே இருந்த கே.வி. ஆனந்தின் உடலுக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு கே.வி.ஆனந்தின் உடல் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கொரோனா விதிமுறைப்படி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டது.

தேசிய விருது பெற்றவர்

குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 90ம் ஆண்டுகளில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.

பின்னர் 1994ம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.

பிறகு 1996ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் பின்னர் நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2005ம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநரானார். இதனை தொடர்ந்து அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

ரஜினி, கமல் இரங்கல்

டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்தின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.” எனத் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் பாரதிராஜா தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட கே.வி. ஆனந்த். உன் மறைவு நம்ப முடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

நடிகர் மோகன்லால், அல்லு அர்ஜுன், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வைரமுத்து ஆகியோரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த டைரக்டர் கே.வி.ஆனந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விவேக்கின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் ஏற்படுத்திய சோகம் இன்னும் விலகாத நிலையில் தற்போது கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு மீண்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *