செய்திகள்

இம்ரான் கானை கட்சிப் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இஸ்லாமாபாத், டிச. 7–

பரிசுப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைவர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கட்சி பதவியில் இருந்து நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

இம்ரான் கான் போராட்டம்

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இவரது தலைமையிலான அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்கிடையே வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற புகாரில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடும் செய்துள்ளார்.

இந்நிலையில், பொது பதவியில் இருந்து இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு அந்நாட்டு தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *