சிறுகதை

இன்ஷூரன்ஸ் | ராஜா செல்லமுத்து

அய்யோ என் கடையில இருந்த பொருள் எல்லாம் எரிஞ்சு போச்சே. இத எங்க போய் சொல்லுவேன். பல லட்ச ரூபா சரக்கு இப்படி தீயில எரிந்து சாம்பலாய் போச்சே…. யார் கண்ணு பட்டுச்சோ….. இந்த பொருளை எப்படி நான் மீட்க போறேன் என்று உயிர் உருக கத்திக் கொண்டிருந்தார் குமரன்.

அவரின் அழுகுரலைக் கேட்ட அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள் இருந்தாலும் குமரனின் அழுகுரல் நின்றபாடில்லை

அவருக்குள் மேலும் மேலும் அழுகை கூடியதே ஒழிய குறைந்தபாடில்லை. எரிந்த பொருட்களை பார்த்து பார்த்து அழுது கொண்டே இருந்தார்.

ஒவ்வொரு பொருளின் பெயரைச் சொல்லி ஒப்பு வைப்பதுபோல அழுது கொண்டிருந்தார் குமரன்.

விடுங்க குமரன் நடந்தது நடந்து போச்சு. இனி ஒன்றும் ஆகப் போவதில்லை. தீ பிடித்ததற்கான காரணம் என்ன அப்படிங்கறது கண்டுபிடிச்சிட்டீங்களே. இனிமே இந்தத் தப்பு மறுபடியும் நடக்காம பாத்துக்கங்க . அதுதான் உங்களுக்கு நல்லது. இல்லன்னா இருக்குற பொருளும் எரிந்து சாம்பல் ஆயிடும். நீங்க இந்த பொருள்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பண்ணி இருக்கீங்க இல்ல என்று கேட்டார் பக்கத்து கடைக்காரர் ஆன நாராயணன்.

ஆமா. எல்லாம் இன்சூரன்ஸ் பண்ணி வச்சிருக்கோம். இன்சூரன்ஸ் பண்ணி வைத்தாலும் கூட அந்தப் பணம் எப்ப கைக்கு வந்து சேரப் போகுதுன்னு தெரியல. இப்பக் கையில ரொக்கமாக இருந்த முதல் போயிருச்சுன்னு ரொம்ப பயமா இருக்கு, வருத்தமா இருக்கு ,அழுகையா வருது. கடன உடன வாங்கி ஒரு தொழில் தொடங்கி முன்னேறலாம்னு நினைச்சா, கடவுள் இவ்வளவு பெரிய கஷ்டத்தை எங்களுக்கு குடுத்துட்டாரு. இத நாங்க எங்க போய்ச் சொல்லுவோம் என்று மறுபடியும் மறுபடியும் அழுதுகொண்டே இருந்தார் குமரன்.

அவரை ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அந்த இரவில் ஏற்பட்ட தீ இரவோடு இரவாக குமரன் கடை முழுவதும் எரிந்து சாம்பலாகி இருந்தது .அதுவும் குறிப்பாக டிவி பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த குடோன் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது. மற்ற பொருட்கள் கூட அவ்வளவு அதிகமாக சேதமடையவில்லை. ஆனால் டிவி அடுக்கி வைத்திருந்த அறைமுழுவதும் எரிந்து டிவி சாதனம் இருந்ததற்கான அடையாளமாக அடையாளமே இல்லாமல் இருந்தது . எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் இரவோடு இரவாக வைத்திருந்தாலும் அதன் எரிந்த வாசம் இன்னும் ஒவ்வொருவரின் நாசியிலிருந்து விலகாமலே இருந்தது . தீ விபத்தை பற்றி விசாரணை செய்து கொண்டிருந்த அதிகாரிகளிடம் மின்கசிவு காரணமாக ஏசி பழுதடைந்ததால் ஏற்பட்ட விபத்து அல்லது சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த தீபத்திலிருந்து தான் தீப்பிடித்து இருக்க வேண்டும் என்று குமரன் சொல்லிக் கொண்டிருந்தார். இது அத்தனையும்கேட்டு குறித்துக் கொண்டிருந்தனர் அலுவலர்கள்.

தீப்பிடித்த கடை முழுவதையும் விலாவாரியாக சுற்றிப் பார்த்துவிட்டு எரிந்த பொருட்களின் மதிப்பீடுகளை மதிப்பீடு செய்து எழுதிக் கொண்டிருந்தனர் அதிகாரிகள்.

குமரன் கடை தீயில் எரிந்தது அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் சாலையில் செல்பவர்கள் என்று அத்தனை பேரும் ஆச்சரியத்தோடு அனுதாபத்தோடு பார்த்துக் கொண்டே சென்றனர்.

வியாபாரிகளின நிலைமை இதுதான் இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் சேர்த்து வைக்கிறார்கள் என்று நாம் அவங்க கூட பேரம் பேசி விட்டு பொருள் வாங்கிட்டுவாேம். இப்படி பொருளை வாங்கி அதனால அவங்களுக்கு கிடைக்கிற லாபம் குறைவு தான் ஆனா இந்த மாதிரி தீ விபத்து ஏற்படும்போது அவங்களுக்கு ரொம்பவே நஷ்டமாகிருது என்று வழிப்போக்கர்கள் அந்த வழியாக செல்பவர்களும் பேசிக்கொண்டே சென்றார்கள்

குமரனின் கடை முழுவதையும் விசாரணை செய்து வெளியேறினார்கள் அதிகாரிகள் .

எப்படியும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் இல்லையா குமரா? என்று அவரைப் பற்றிய அக்கறை உள்ள மனிதர்கள் கேட்டனர்.

அதுக்கு மேலேயே இருக்கும் போல எல்லாப் பொருள் எரிந்து சாம்பலாகிப் போச்சே. குறிப்பா டிவி வச்சிருக்கிற குடோன்.முற்றிலும் எரிந்து சாம்பல் ஆயிருச்சு. இதனை எப்படி ஈடுகட்ட போறேன்னு தெரியல என்று குமரன் மறுபடியும் அழுது புலம்ப அவரின் அழுகையை பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பரிதாப பரிதாபமாக இருந்தது.

அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் அலுவலர்கள்.

அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டு போன பிறகு, கடை சுத்தம் செய்யப்பட்டது. ஒரே கவலை மையமாக இருந்த குமரன் தனக்கு தானே தேற்றிக் கொண்டார். நடந்தது நடந்து போச்சு இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்று அவரும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சொல்லவும் அதுவே சரி எனப்பட்டது குமரனுக்கு.

மறுநாள் தீக்கிரையான கடை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு ஓரிரண்டு நாட்களில் குமரன் கடை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க ஆரம்பித்தது. மாதங்கள் கடந்தன. தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதில் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி பெட்டிகள் இருந்ததற்கான ஆதாரத்தை இன்சூரன்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்திருந்தார் குமரன் . அந்த தொலைக்காட்சி பெட்டிக்கு எரிந்து போன தொலைக் காட்சி பெட்டிக்கு இன்சூரன்ஸ் செய்து வைக்கப்பட்டிருந்த அவ்வளவு பணமும் ஒரு சில மாதங்களில் குமரனின் கைக்கு வந்து சேர்ந்தது.

நடந்தது நடந்து போச்சு. இனிமேலாவது உன்னோட கடைய நல்லா பாத்துக்க குமரா என்று வாழ்த்துக்களும் கரிசனையும் சொல்லிவிட்டு சென்றார்கள் நண்பர்கள் .

எரிந்து போன தொலைக்காட்சிக்கான தொகையை வாங்கிய குமரன் அந்த தொகையை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். அவரின் கணக்கு தப்பவில்லை .

மாதங்கள் ஓடின.

முன்னைவிட வியாபாரம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. குமரன் மறுபடியும் ஒரு யோசனை செய்தார். வருடங்கள் கடந்தன மீண்டும் ஓர் இரவு குமரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பாக தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. மற்ற பொருட்கள் லேசான தீயுடன் தப்பித்துக் கொண்டன

முன்னைப் போலவே மறுபடியும் அழ ஆரம்பித்தார் குமரன்.

ஐயோ என்னோட கடை எரிஞ்சு போச்சு தொலைக்காட்சிப் பெட்டி எல்லாம் எரிஞ்சு போச்சு. இப்ப நான் என்ன பண்ணுவேன் கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஆயிருச்சு” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்

என்ன இது அடிக்கடி இவருடைய கடையில் மட்டும் தீவிபத்து ஏற்பட்டு இருக்கே என்று பக்கத்து கடைக்காரர்களும் வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சிகளும் மீடியாக்களும் குமரன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. குமரன் மறுபடியும் இன்சூரன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார் .

என்ன குமரா இப்போ கோடிக்கணக்கான ரூபா தொலைக்காட்சிபெட்டி எரிந்து சாம்பலாக போயிடுச்சே. என்னப்பா இது. உன்னுடைய கடைக்கு வந்த சோதனையா இது? ரொம்ப பாதுகாப்பா இருக்கனும். சாமி கோயில்ல மந்திரிச்சு ஏதாவது தாயத்து வாங்கி கடைக்கு கேட்டு ஏதாவது தோஷ பரிகாரம் பண்ணு. அப்பதான் இனிமேல் தீ பிடிக்காது என்று குமரனின் நலம் விரும்பிகள் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் அவர்கள் இருக்கும்போது சரி சரி என்று கேட்டுக் கொண்டிருந்த குமரன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். இன்சூரன்ஸ் அதிகாரிகள்முன்பு வாங்கிய பணத்தை விட இப்போது இந்த தொலைக்காட்சிபெட்டிகளுக்கு அதிகமாக பணம் கிடைக்கும் என்று நம்பினார் குமரன் .

தன்னுடைய மனத்திரையில் அதை கணக்காக போட்டுப் பார்த்தார். பழைய டிவிகள், உடைந்து போனது, ஒட்டவைத்து, டிவி சாமான்கள் ,என்று ஒரு பக்கம் அடுக்கினார். அட்டைப் பெட்டிகள் ,சில்வர் நேம் போர்டுகள் என்று அத்தனையும் அடிக்கி தொலைக்காட்சிபெட்டி அறை போல அதை செய்து கடையை முடித்து எல்லோரும் போனபிறகு குமரனே அதில் தீ வைத்துவிட்டு தொலைக்காட்சி அறை முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருந்த அறை முழுவதும் தீ எரிந்து சாம்பலாகி விட்டது. இனி என் பொழைப்பு எப்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள என் தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம் தீயில் கருகி விட்டது என்று அவர் தெருவில் நின்று அழுதது ஞாபகம் வர தனக்குத்தானே சிரித்துக் கொண்டார் குமரன்.

ஒன்றுமில்லாத அட்டைப்பெட்டி, பழுதடைந்த கெட்டுப் போன பழையது போட்டு நாமலே தீ வைத்துவிட்டு இன்சுரன்ஸ் என்கிற பெயரில் பல கோடி ரூபாய் என மொ்சல் பண்ணிக்கிட்டு இருக்கோம். இது தொடர்ந்தா நாம நிச்சயமா இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கோடிஸ்வரன் ஆயிடலாம். இன்னும் நிறைய கடைகளைத் திறக்கலாம் “என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த குமரனுக்கு,

அடுத்து இன்னும் எத்தனை கடைகளை திறக்கலாம் என்பதும் இன்சூரன்ஸ் அதிகாரிகளிடம் எவ்வளவு பணம் கறக்கலாம் என்பதும் மனதில் ஓட அவருடைய அரக்க மனம் ரொம்பவே கொக்கரித்து. சிரித்தது. முன்பு வாங்கிய தொகையை விட இப்பொழுது நிறைய இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். இவரின் இந்த சூழ்ச்சி தெரியமால் உண்மையிலேயே குமரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் சரக்குகள் நாசமாகி விட்டன ; தீயில் எரிந்து கருகி விட்டன; அவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த இன்சூரன்ஸ் அதிகாரிகள் குமரனின் கடையை பார்க்க விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.

குமரன் தனக்குத்தானே பெருமிதம் கொண்டார். இன்னும் இரண்டு மூணு இடத்துல கடையை திறந்து இந்த மாதிரி பண்ணுனா எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தை அழகா வாங்கிடலாம் என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டிருந்தார் குமரன். அதிகாரிகள் குமரன் கடைக்கு வந்து கொண்டிருந்தனர்.

குமரன் இன்சூரன்ஸ் பணத்தை கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் .இந்த ஏமாற்று வேலை எவ்வளவு காலத்துக்கு வரும் என்பது குமரனுக்கும் தெரியாது. இன்சூரன்ஸ் அதிகாரிகளுக்கும் தெரியாது.

ஆனால் தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் ஒருநாள் வீதிக்கு வந்தே தீரும் என்பது குமரனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *