செய்திகள் நாடும் நடப்பும்

இனி உணவுகளின் சத்து, தரக் குறியீடு கட்டாயம் : மத்திய அரசு முடிவு


ஆர். முத்துக்குமார்


உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா? விளம்பரத்தை போல் நொறுக்குத் தீனிகளில் உப்பு, இனிப்பு போன்றவைகளின் அளவு எவ்வளவு இருக்கிறது தெரியுமா? என்ற கேள்வியை இதுநாள் வரை கேட்காதவர்கள், இனியும் அப்படி அக்கறையின்றி இருந்து விட்டால் நமது ஜனத்தொகை ஆரோக்கியமற்றதாக மாறிவிடும் அபாயம் எழுந்துள்ளது.

சமீபமாக தேடி வந்து உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, டன்சோ போன்ற பல்வேறு அமைப்புகளின் ஆதிக்கத்தில் சமுதாயம் சிக்கிக் கொண்டு இருக்கிறது.

கடைகளுக்கும் உணவகங்களுக்கும் சென்று ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்புகளை உணர்ந்து சாப்பிடாத நாம் இப்படி ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடும்போதும் கவனிக்கவா போகிறோம்!

வரவழைத்து சாப்பிடும் பதார்த்தங்கள் கெட்டுப்போனதாகவோ, அதிக காரம் கொண்டதாகவோ இருக்கப்போவதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பலதரப்பட்ட ரசாயன சேர்க்கைகள் கொண்டு சமைக்கப்பட்டால் சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும் அபாயம் இருக்கிறது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உணவு மிக அத்தியாவசியமானது என்பதால் அதன் தரம் எந்நிலையிலும் சரியானதாகவே இருக்க வேண்டுமென்பதில் 1970கள் முதலே பல்வேறு திட்டங்களையும் நடைமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

அதில் உணவில் எவ்வளவு இனிப்பும் உப்பும் சரியாக இருக்க வேண்டும் என்பதையும் வரையறை செய்து இருக்கிறார்கள்.

நார்வே போன்ற கடல்சார் பனிப்பிரதேசத்தில் மீன் உணவே பிரதானமாகும். அங்கு கருவாடு, அதாவது உலர்ந்த மீன் மிக ருசித்து சாப்பிடப்படும் உணவாகும். அதில் உப்பு மிக அதிகம் உபயோகித்தாக வேண்டிய கட்டாயம் உண்டு!

உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டால் உடலில் சோடியம், பொட்டாசியம் முதலிய ரசாயனங்கள் அதிகமாக சாப்பிட வேண்டியதாக இருக்கும்.

இது இருதய கோளாறுகளுக்கு வித்திடுகிறது! நமது நாட்டில் உப்பு இல்லை என்றால் குப்பையிலே! என்று தானே சிறுவயது முதலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலர் சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுகிறோம்; சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது கிடையாதே எனக் கூறலாம்.

ஆனால் தயிர் சாதத்துடன் ஊறுகாயோ, பொரித்த அப்பளமேலா இன்றியா சாப்பிடப் போகிறோம்!

தயிரில் சோடியம் இல்லை தான், ஆனால் மோராக மாற்றினால் குறைந்தது 16% சோடியம் அதிகரித்து விடுகிறது! கூடவே மாங்காய் அல்லது எலுமிச்சை ஊறுகாயை சேர்த்தால் மேலும் 14% சோடியம் சேர்த்துக் கொள்கிறோம் அல்லவா?

45 வயதை கடந்தவர்களுக்கு இப்படி ஒரு உணவில் சோடியம் ஒரு உணவு ரகத்தில் கூடுதலாக இருக்கிறதே? என்ற உணர்வுடன் சாப்பிட ஆரம்பித்தால் தானே நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மதிப்புள்ள உணர்வை புரிந்து ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

தேவையான ஊட்டச் சத்துக்கள் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் உணவை ரசித்து சாப்பிடுவார்களுக்கு 50 வயதிலேயே பல்வேறு நோய்கள் தலைத்தூக்க ஆரோக்கியமான வாழ்வை 55 வயதிலேயே இழந்து விடுகிறோம்.

உடல் பருமன், நரம்பு தளர்ச்சி, இருதய கோளாறுகள், புற்று நோய் என பல்வேறு சிக்கல்களில் முக்கிய காரணிகள் நாம் சாப்பிடும் உணவு தான்.

அடுத்த மாதம் முதல் FSSAI அமைப்பு அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை உறுதி செய்யும் தேசிய அமைப்பு இப்படி வீடு தேடி வரும் உணவுகளை சப்ளை செய்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி விட்டனர்.

அதன்படி இனி சொமோட்டோ, ஸ்வீகி கையாளும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உணவின் தரத்தையும் அச்சிட்டாக வேண்டும்.

அப்படிப்பட்ட தகவல்கள் இருந்தும் அதைப் படித்து தெரிந்து கொண்டு சாப்பிடுவது இல்லை என்று கூறுபவர்கள் நம் நாட்டில் மிக அதிகம். பண்டை காலம் முதலே இதை சாப்பிட உடலுக்கு நல்லது என பெற்றோரும் முதியவர்களும் கூறியதால் சாப்பிட்டு வளர்ந்தோம்.

இனி ஆதாரப்பூர்வமாக ஊட்டச்சத்தின் அளவை படித்து, அந்த உணவின் உண்மை ரூபத்தை தெரிந்து கொண்டு சாப்பிடுவது தான் சரியானது என்பதை மறந்து விடக்கூடாது.

நமது இந்திய பாரம்பரிய நொறுக்குத் தீனிகளை அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறு, பெரிய கடைகளில் இருப்பதே இல்லை. அதற்கு முக்கிய காரணம் உணவு, தரம், சுவை, ஊட்டச்சத்தின் அளவுகளை தருவது இல்லை.

நம் நாட்டிலும் அச்சிடப்பட்ட முத்திரைகளுடன் உணவுப்பொருட்கள் வரத் தொடங்கினால் நம்மில் பலரும் வயதான காலத்திலும் மற்றவர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் பாரமாக மாறி விடாமல் சுயமாய் சொந்தக்காலில் நின்று வாழலாம்.

முதுமை சாபமா? வரப்பிரசாதமா? என்ற விவாதத்தை விட முதுமையில் யாருடைய உதவியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது தானே சரி என்ற விவாதத்திற்கு மிகத்தேவையானது; நல்ல ஆரோக்கியமான உணவாகும்.

அது ரசமாக இருந்தாலும் மோராக இருந்தாலும் நமது பாரம்பரிய இனிப்புகளான கமர்கட்டு, லட்டு, மைசூர்பாகாக இருந்தாலும் ஊட்டச் சத்துகளின் அளவையும் இனிப்புக்கு சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட இனிப்புகளுக்கான அளவையும் தெரிந்து கொண்டு சாப்பிட்டால் திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது போல்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற குறள் தரும் தெளிவுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published.