தமிழ் மண்ணுக்கே உரிய தனித்துவம் பெற்ற பண்டிகை தை மாத முதல் நாளில் கொண்டாடப்படும், தமிழ்த் திருநாளாம் பொங்கல் திருநாள். பொன் விளையும் பூமி என்றழைக்கப்படுகின்ற உழவனின் உழைப்பில் உருவாகும் வயலில் கிடைக்கின்ற விளைச்சலை நினைவு கூர்ந்து, கொண்டாடப்படுகின்ற இன்ப நாளே தைத்திருநாள். உலகில் வாழ்பவர் பல தொழில்களைச் செய்து வாழ்ந்தாலும், உணவுக்கு உழவரையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, உழவுத் தொழிலே தலை சிறந்த தொழிலாகும் என்று திருவள்ளுவர் உழவின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.
‘‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, என்றும் நமது வாழ்விலே பஞ்சமே இல்லை’’ என்ற ஒரு திரைப்பாடல் உண்டு. அவ்வகையில், உழவர் பெருமக்கள் இரவும் பகலும் வயல்வெளியில் பாடுபட்டு, நெல்மணிகள், இஞ்சி, மஞ்சள், செங்கரும்பு, செவ்வாழை, காய் கனிகள் யாவற்றையும் விளைவிக்கின்றனர்.
அப்பொருட்களை களத்து மேட்டுக்குக் கொண்டுவந்து, பயிர் விளைச்சலுக்குப் பெருங்காரணமாக இருக்கின்ற, வான்மழையை நினைத்து, அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கின்ற சூரியனுக்குப் புத்தரிசி பொங்கலிட்டு, படையல் போட்டு, உழவர்தம் குடும்பத்தினர்களோடு ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று குலவியிட்டு வணங்கும் இன்ப நாளாம் இந்தப் பொங்கல் திருநாளில் உலகமெல்லாம் இந்நாளைக் கொண்டாடும் இனிய நெஞ்சங்களுக்கு என் இன்பப் பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.