செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் புதிய கல்லூரிகள்

அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி ஆலோசனை

சென்னை, செப்.18–

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று திருக்கோயில்களின் சார்பாக 10 புதிய கல்லூரிகள், ஒரு சித்த மருத்துவமனை துவங்குவதற்கான பணிகள் குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை குழுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன் (அண்ணா நகர்), திரு.மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), பி.எஸ்.டி.சரவணன் (கலசப்பாக்கம்), துரைசந்திரசேகர் (திருக்காட்டுப்பள்ளி), ஏ.சௌந்திரபாண்டியன் (லால்குடி), இ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோர் முன்னிலையில்நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கையின்போது துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரி மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரிகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம் கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் இலால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதியதாக கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பழநியில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியை சார்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் கொண்டு குழு அமைத்து அடுத்த ஆண்டிற்குள் கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முதலாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆலோசனையின்பேரில் கல்வி மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தேர்வு, உள்கட்டமைப்புகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், – ஆர்.எம்.கே. கல்விக் குழு நிறுவனத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், சென்னை பப்ளிக் பள்ளி குழுமம் தலைவர் என்.தேவராஜன், சென்னை வேலம்மாள் கல்விக் குழுமம் மு.வேல்மோகன், எவர்வின் கல்விக் குழுமம் மூத்த தலைவர் பி.புருஷோத்தமன், திரு. டி.ஏ.வி. கல்விக் குழுமம் மூத்த முதல்வர் வி.ராஜேந்திரன், சேது பாஸ்கரா கல்விக் குழுமம் சேது குமணன், கற்கப விநாயகம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ஆர். அண்ணாமலை, பி.எஸ்.ஜி. கல்விக் குழுமம் பொது மேலாளர் வி. ஜெகன்நாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *