செய்திகள்

இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு ஜெயில்:ஆஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு

சிட்னி, மே.1–

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டிருக்கிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-ஐ தாண்டி விட்ட உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படி கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கும், தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்குமான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்து இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியர்கள் பலர் இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்தனர். சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிட்ச்சர்ட்சன் ஆகியோரும் இதே முறையை பயன்படுத்தி தங்கள் நாட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இதையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது. தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மே 3ந் தேதி முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரவிருக்கிறது என்று சுகாதார அமைச்சர் க்ரெக் ஹண்ட் அறிவித்தார். மே 15ந் தேதி வாக்கில் அரசு இந்த கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கூடும் என்றார்.

ஆஸ்திரேலிய சர்ஜன் நீலா ஜானகிராமன் இந்த அறிவிப்பு பற்றி கூறுகையில், இப்படி கடுமையான தண்டனை விதிப்பது உகந்ததல்ல என்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவிலும் இதே கொரோனா தாக்கம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அப்படி எதுவும் சொல்லாமல் (அந்நாடுகளிலிருந்து வருபவர்கள்) இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 5 ஆண்டு ஜெயின் தண்டனை என்று எச்சரித்து அறிவித்திருப்பது இந்திய – ஆஸ்திரேலிய இன வேறுபாட்டைத் தான் காட்டுவதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவிலிருந்து 9000 ஆஸ்திரேலியகள் உடனடியாக பறந்தனர். இவர்களில் 650 பேர் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *