செய்திகள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு

இஸ்லாமாபாத், அக். 29–

பிரமாண்ட பேரணியை நடத்தும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மேற்கத்திய அழுத்தங்களை மீறி, நாட்டு நலன்களுக்கான இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு முன்னர் பதவி இழந்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி இழக்கச் செய்தன. இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான் கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகபெரும் பேரணியை தொடங்கி, நவம்பர் 4ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு பாராட்டு

இந்த பேரணியின் போது ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசி உள்ளார். உக்ரைன் போருக்கு இடையில், மேற்கத்திய அழுத்தங்களையும் மீறி, அதன் தேசிய நலன்களுக்கு ஏற்ப, சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கியதற்காக இந்தியாவை இம்ரான் கான் பாராட்டினார்.

எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். சுதந்திரமான பாகிஸ்தானைப பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்தி வாய்ந்த ராணுவம் தேவை என்றும் கூறினார்.

நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும் போது, அது ஆக்கப்பூர்வமாகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை. எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *