சென்னை, அக். 28
ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு விழிப்புணர்வு பரப்புரையின் ஒரு பகுதியாக பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) இன்று சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.
நவம்பர் 3-ந் தேதி வரை “தேசத்தின் செழுமைக்காக நேர்மை கலாச்சாரம்” என்ற கருப்பொருளைக் கொண்ட நிகழ்வோடு இந்த வார நிகழ்ச்சிகள் நிறைவடையும். வங்கி-யின் செயலாக்க இயக்குநர் டி. தனராஜ், தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார், வங்கியின் பொது மேலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை பிராந்திய அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த வாக்கத்தான் நிகழ்வில் கலந்துகொண்டனர். ஊழல் மற்றும் லஞ்ச செயல்பாடுகள் நிகழாமல் தடுப்பது மற்றும் கண்காணிப்பு குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிப்பதும், ஊழல் இல்லாத சமூகத்தை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
“அனைத்து குடிமக்களின் மனமார்ந்த, தீவிர ஆதரவைக் கொண்டு லஞ்சம் மற்றும் ஊழல் செயல்பாடுகளை ஒழிக்கவும் மற்றும் நேர்மையை ஊக்குவிக்கவும் இந்த வங்கி அயராது பாடுபடுகிறது’’ என்றார் டி.தனராஜ்.
தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார் பேசுகையில், “பொது ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் நன்னெறி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய பண்புகளை பணியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆழப் பதியுமாறு செய்வதற்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த செயல்தளமாக ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிகழ்வு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கூடுதலாக, ரங்கோலி கோலப்போட்டி, புதிர் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு மீது பிரபல ஆளுமைகள் பங்கேற்கும் கருத்தரங்கு ஆகியவை இவ்வங்கியால் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன. வங்கியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதும் மற்றும் நேர்மையான நடத்தையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வுகளின் குறிக்கோள்களாக இருக்கும்.