சினிமா செய்திகள்

‘‘இசை உலகின் சுயம்பு லிங்கம் இளையராஜா’’: ரஜினி பெருமிதம்

சென்னை, பிப்.4–

‘இளையராஜா, இசை உலகின் சுயம்பு லிங்கம்” என்று சென்னையில் நடந்த இளையராஜா – 75 என்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. ‘இளையராஜா– 75’ விழாவின் 2-வது மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்–பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர்.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

‘‘கலைகளிலேயே உயர்ந்த கலை இசைக் கலை. அதுதான் சாமானியர்களுக்கும் புரியக்கூடியது. அதனால், இசைக் கலைஞர்களை பெரிதும் போற்றுகிறேன். தானாக வளர்வது சுயம்பு லிங்கம். லிங்கங்களிலேயே சுயம்பு லிங்கத்துக்குதான் பவர் அதிகம். அதுபோல, இசையின் சுயம்புதான் இளையராஜா. அவரது ஒட்டுமொத்த திறமையும் ‘அன்னக்கிளி’யில் இசையாக வெடித்து வெளிவந்தது. அன்று தொடங்கிய அவரது இசை ராஜ்ஜியம் இன்றுவரை நடக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது. இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் இளையராஜாவை ‘ராஜா சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன்.

ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக மாறியிருந்தார். அவரை ‘சார்’ என்று கூப்பிடத் தோன்றவில்லை. எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன். அதுமுதல், நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறோம். பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக, தூய்மையாக இருக்கிறார் என்பதற்கு இளையராஜா உதாரணம்.

ரமண மகரிஷியை அறிமுகப்படுத்தியவர்

ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான்.

பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.

கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் தீபாவளி, பொங்கல், பண்டிகை நாள் என்றால் 15, 16 படங்கள் ரிலீஸாகும். அதில் பெரும்பான்மை படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருப்பார். 60% பாடல்களுக்க அவர் தான் எழுதினார்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ–ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ–ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இளையராஜா இசையமைத்து முடித்துவிட்டார் என்றால் தயாரிப்பாளர்கள் குஷியாகி விடுவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலே செய்து கொடுத்திருக்கிறார்.

ஒரே நாளில் 3 படங்களுக்கு ரீ–ரிக்கார்டிங்

இப்போதெல்லாம் ஒரு படத்தின் ரீ–ரிக்கார்டிங்குக்கு 30 நாட்கள் ஆகிறது. ஆனால், இளையராஜா ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ–ரிக்கார்டிங் செய்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.

‘பொதுவாக என் மனசு தங்கம்…’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்…’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்…’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். ‘‘சரஸ்வதி மட்டுமல்ல, லட்சுமியும் இப்போது இளையராஜாவிடம் வாசம் செய்கிறாள்.’’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

* * *

ரஜினி பேசுகையில், இளையராஜா குறுக்கிட்டு, ‘‘இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்பார். ஏன், ராமராஜன், மோகனுக்கு நான் நல்ல பாட்டு தரவில்லையா. எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரின் படங்களுக்கும் ஒன்றுபோலதான் இசையமைக்கிறேன்’’ என்றார்.

* * *

கமல்ஹாசன், ‘ஹேராம்’ படப் பாடல், ‘நினைவோ ஒரு பறவை’ (சிகப்புரோஜாக்கள்), ‘உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது’(விருமாண்டி) ஆகிய பாடல்களை சித்ராவுடன் இணைந்து பாடினார். மகள் ஸ்ருதிஹாசனுடனும் இணைந்து பாடினார் கமல்.

விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், லதா ரஜினிகாந்த், பி.வாசு, விஜய் சேதுபதி, மோகன்பாபு, வெங்கடேஷ், விஜய் ஆன்டனி, கார்த்தி, மனோ உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *