சிறுகதை

இக்கரைக்கு அக்கரை… | ராஜா செல்லமுத்து

Spread the love

அப்பா, இனிமே ஒரு நாள் கூட, அவன் கூட நான் இருக்க மாட்டேன். மனுசனா அவன் மிருகம். மனுச உருவுல இருக்கிற காட்டேரி என்று கணவன் மிதுனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அனிதா

“என்னம்மா சொல்ற?

“ஆமாப்பா”

அவன் ஒரு சேடிஸ்ட். அவன் கூடவெல்லாம் வாழவே முடியாது. இதுவரைக்கும் அவன் கூட குப்பை கொட்டுனது போதும். அவன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை வாங்கிக் குடுங்க; இல்ல நான் தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழியே இல்ல என்று கதறிக் கொண்டிருந்தாள் அனிதா.

“ஏய், என்ன சொல்ற அனிதா’’

“ஆமாப்பா …. அவன் கூட இது நாள் வரைககும் நான் குப்பை கொட்டுனதே பெரிய விசயம். நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி, அவன் கூட நான் சந்தோசமா வாழலப்பா. அவன் ஒரு மிருகம் மனுச உணர்வுகள புரிஞ்சுக்கிறாத ஜடம். அவனுக்ககெல்லாம் எதுக்கு பொண்டாட்டி குடும்பம் எல்லாம்.

பெத்த தாய், தகப்பன்கிட்ட எல்லாம் நான் அனுபவிக்கிற அவஸ்தைய சொல்ல முடியாதுப்பா. அது ரகசியம் என்று அப்பா சாமிநாதனிடம் சொல்லும் போதே அனிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொலப்பொலவென உதிர்ந்தது.

நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னைய மன்னிச்சிரும்மா ; நீ என்னோட மகளா இருந்தாலும் பரவாயில்ல, உன்னோட கால பிடிச்சு மன்னிப்பு கேட்டா தான் என்னோட மனசு ஆறும் என்று சாமி நாதன் அனிதாவின் காலில் விழப் போகும் போது அம்மா அங்கம்மாள் கணவனைத் தடுத்து நிறுத்தினாள். நீங்கமட்டுமா அவ கால்ல விழணும் நானும் சேந்து தான் அவகிட்ட மன்னிப்பு கேக்கணும். ரெண்டு பேரும் சேந்து தான் நம்மோட பொண்ணு வாழ்க்கைய கெடுத்திட்டோம்னு நினைக்கிறேன்” ரெண்டு பேருமே நெடுஞ்சாண்டையா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறது தான் மரியாதை என்று அப்பா, அம்மா இரண்டு பேரும் அனிதாவின் காலில் விழப் போனார்கள்.

அம்மா அப்பா என்ன பண்றீங்க?

“அப்பா எந்திரிங்க” விதி செஞ்ச தப்புக்கு நீங்க என்ன பண்ண முடியும் . இப்படிதான் என்னோட வாழ்க்கை ஆகணும்னு கடவுள் எழுதி வச்சுருக்கான் . இதுல உங்களச் சொல்லி என்ன பிரயோசனம் என்று தாய் தந்தையைப் பிடித்து அழுது கொண்டிருந்தாள் அனிதா . அவள் அழ, அவளைப் பார்த்து அம்மா, அப்பா இரண்டு பேரும் அழ அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

மூவரும் அழுது கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் விறுவிறுவென வீட்டின் உள்ளே நுழைந்தனர். அப்படி அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்த மூவரும் அவரசரம் அவசரமாக கண்ணீரைத் துடைத்தனர்.

என்ன சாமி நாதா இப்ப ஏன் அழுதிட்டு இருந்தீங்க?

இல்லையே நாங்க அழலயே என்று ஈரக்கண்கள் இரண்டையும் தன்கையில் துடைத்துக் கொண்டார் சாமிநாதன். அனிதாவும் அம்மாவும் அடுப்படிக்குள் நுழைந்தனர். சாமிநாதா பொம்பள புள்ளைகள பெத்த எல்லாருக்குமே இது தான் நிலைமை. நீங்க அடக்கி வச்சிட்டு இருக்கீங்க. அவ்வளவு தான்.

குடும்பம்னா மேடுபள்ளம் இருக்கதான் செய்யும். அத எல்லாம் அனுசரிச்சு போறது தான் வாழ்க்கை என்று பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல சாமிநாதன் எல்லாம் தெரிந்தது போல ஆமா என்று தலையாட்டினார்.

இதை அடுப்படியிலிருந்து அம்மாவும் அனிதாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“சரி சரி, சண்டை ஏதும் வந்துச்சுன்னா. அதச் சமாதானப் படுத்தி, புருசன் வீட்டுக்கு அனுப்புற வழியைப் பாருங்க.

பொம்பளப் புள்ள வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காதுங்க என்று சாமிநாதனைச் சமாதானப் படுத்திவிட்டு சென்றனர்.

அதுவரையில் அடுப்படியிலிருந்த அனிதாவும் அம்மாவும் வெளியே வர சாமிநாதனுக்கு நின்றிருந்த கண்ணீர் மறுபடியும் மடை திறந்து வழிந்தது.

‘‘அம்மா …. யம்மா அனிதா புருசன் கூட அப்படி என்ன தான் பிரச்சினை’’

சொல்ல முடியாதுப்பா என்றதும்

” ஏய் , பெத்த தாய் தகப்பன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போற. ஏதாயிருந்தாலும் தைரியமா சொல்லு என்று அம்மாவும் உசுப்ப வாய்மூடி அழுதவள்,

அவரு என் கூட படுக்கிறதே இல்லம்மா. தனியா தான் படுக்கிறார். எப்பவும் சாமி சாமின்னு தான் சாமிய கும்பிட்டுட்டு திரியுறாரேயொழிய என்கூட ஒரு நாள் கூட சந்தோசமா இருந்ததில்லம்மா என்று அழுத போது இருவரும் இடிந்தே விழுந்தனர்.

எப்ப பாத்தாலும் சாயவேட்டிய கட்டிட்டு, சாமி பாட்டுகள பாடிட்டு, ஒரு கூட்டத்த சேத்துக்கிட்டு தான் இருப்பாரேயொழிய, ஒரு நாள் கூட என்னோட குடும்ப வாழ்க்கை நடத்துனது இல்லம்மா என்று அழுது புலம்பினாள்.

“என்னது இந்த வயசுல சாமியா? அவனவன் சாமிகிட்ட இருக்கிறவனே சம்சாரி வாழ்க்கை நடத்திட்டு இருக்கும் போது சம்சாரம் கூட இருந்திட்டு சாமியார் வாழ்க்கை நடந்துறான். இவன மாதிரி ஆளுகளால தான் நல்ல குடும் வாழ்க்கையே கெட்டுப் போகுது. இனிமே இவன் கூட நம்ம புள்ள குடும்பம் நடத்த வேணாம்

நாளைக்கு ஒரு வக்கீல் பாத்து அத்து விட்டுர வேண்டியது தான் என்று கொக்கிரித்தார் சாமிநாதன்,

கல்யாணமான நாள்ல இருந்து எம்புள்ள எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கு. படுபாவிப்பய அவன் கண்ணுல கொள்ளிய வைக்க என்று அம்பாவும் தன் பங்குக்கு பேசிக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு நாள் கஷ்டப் பட்டிருக்கே. இத எப்படிம்மா தாங்கிக்கிட்ட என்று சாமிநாதன் கேட்டபோது அவருக்கு ஒரு சாமின்னா எனக்கு ஒரு சாமிய புடிச்சுது. நிம்மதி தான்னு தெனமும் சாமிய அழுதிட்டே சாமிய கும்பிட்டுகிட்டே இருந்தேன்பா என்று அனிதா சொன்ன போது ….

என்னது நீயும் சாமியா கும்பிடுறியா? என்று அம்மாவும் அப்பாவும் விறைத்துப் போய் நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *