செய்திகள்

ஆஸ்கார் வென்ற தமிழ் குறும்படம் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படக்குழுவினர் மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி, மார்ச்.31-

ஆஸ்கார் வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ தமிழ் குறும்படத்தை தயாரித்த படக்குழுவினர் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தின் முதுமலை யானை பராமரிப்பு குறித்து எடுக்கப்பட்ட தமிழ் குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பிள்ளைகள் போல வளர்க்கும் பாகன் தம்பதியை பற்றிய இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு உள்ள முதுமலை வனப்பகுதியிலேயே நடந்தது.

இந்த படத்தை மும்பையை சேர்ந்த பெண் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வெஸ் டைரக்டு செய்திருந்தார். குனீத் மோங்கா தயாரித்தார்.

ஆஸ்கார் வென்று சாதித்த இந்த படக்குழுவினருக்கு பிரதமர் மோடி ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படக்குழுவினர் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வெஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

அப்போது, நாட்டுக்கு ஆஸ்கார் விருது பெற்றுத் தந்த படக்குழுவினரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

பின்னர் இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படத்தின் கருத்தும், வெற்றியும் உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்’ என குறிப்பிட்டு இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *