சிறுகதை

ஆள்வர்ராங்க… | ராஜா செல்ல முத்து

“செல்வராஜ் அண்ணே, பங்ஷன் எத்தன மணிக்கு ஆரம்பிக்குது.

“அஞ்சு, அஞ்சரையாகும்”

“நீங்க எத்தன மணிக்கு வருவீங்க”

“அஞ்சு மணிக்கு”

“அண்ணே”

“என்னப்பா”

‘‘அஞ்சு மணிக்கு பங்ஷன், நீங்க ” அஞ்சு மணிக்கு வாரேன்னு சொல்றீங்களே”

” என்னைக்கு சொன்ன டைமுக்கு ஆரம்பிச்சானுக. பாரு, ஆறு, ஏழு மணியாகும்”

அவ்வளவு நேரமாகுமா?

“பாரு, கண்டிப்பா அவ்வளவு நேரம் நிச்சயமா ஆகும்”

சரி, நான் கிளம்பி ரோட்டுக்கு வந்திரவா?

” ஏன், வீட்டிலேயே இருப்பா., நான் கீழ வந்து கூப்பிடுறேன்”

“சரிண்ணே” என்ற நான், நாலரைக்கே கௌம்பி தயாராக இருந்தேன்.

” ஓ” அதுக்கென்ன? வீட்டுலயே இரு என்றவர் போனைக் கட் செய்தார்.

“ம்…. அவ்வளவு நேரம் என்ன பண்றது. வீட்டினுள் உள்ளே உலாத்திக் கொண்டிருந்த நான், மாதுளம் பழத்தை எடுத்து கட் செய்தேன்… வைரத்தைப் போல மின்னியது வெட்டப்பட்ட மாதுளம்பழம் ” ஆகா, என்னவொரு அதிசயம். கடவுள் படைப்போ …. படைப்பு என்று மாதுளையைப் பார்த்த நான், பழத்தை உதிர்த்து சாப்பிட ஆரம்பித்தேன். கடிகார முள், அப்போது மிகவும் மெதுவாக ஓடுவதாக உணர்ந்தேன். உதிர்த்த மாதுளம் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பக்கத்து வீட்டுப்பாட்டியிடமும் கொடுத்தேன்.

” தம்பி, நல்லா சாப்பிடுற போல”

“இல்லையே”

“நீ சாப்பிடுற மாதுளை, ஆப்பிளை தான் நான் பாத்திருக்கனே”

” ம்”

” என்ன இந்நேரம் கிளம்பிட்ட போல”

“ஆமா பாட்டி, ஒரு பங்ஷன் போறேன். அண்ணனுக்காக காத்திட்டு இருக்கேன்

” சரி, சரி, என்ற பாட்டி, கொடுக்கும் மாதுளையை வேண்டாமென்று சொல்லாமலே வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நேரம் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்தது. மாதுளையைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றேன். நேரம் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்து, ஆறைத் தொட்டு நின்றது.

” ம்…. இந்நேரம் பங்ஷன் முடிஞ்சிருக்கும் போல. இன்னும் அண்ணைக்காணமே. மீண்டும் வீட்டிற்குள் உலாத்திக் கொண்டிந்தேன். அப்போது ” டிரிங்….. டிரிங்…. என செல்போன் அலறியது.

’ஹலோ….”

” தம்பி நான் வந்திட்டேன்… கீழ வா, என்றார் , செல்வராஜ் அண்ணன்,

” சரி” என்ற நான் வீட்டிலிருந்த குப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினேன்.

கையில என்னப்பா,

” குப்பைண்ணே”

“நைட்டு…. வீட்டுல இருக்கிற குப்பைய வெளியே கொண்டு போகக்கூடாது”

“ஏண்ணே”

“வீட்டுல இருக்கிற சீதேவி வெளிய போயிரும்”

“சரிசரி” என்ற நான் டூவிலரில் ஏறி உட்கார்ந்தேன்.

” ஏண்ணே”

“ம்”

“இந்நேரம் பங்ஷன் ஆரம்பிச்சிருப்பாங்களா?

” ம்… ஹூகும்”

“ஏன்?

” நம் ஊர்ல எப்பிடி சொன்ன நேரத்துக்கு ஆரம்பிப்பாங்க. கண்டிப்பா ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க” எப்பிடிண்ணே அவ்வளவு கரைக்டா சொல்றீங்க”

“ஒரு வியூகம் தான் தம்பி” என்ற செல்வராஜ் அண்ணன், சந்தடிகளின் ஊடே வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்” சாலை எங்கும் டிராபிக் ஜாம்”

பாருங்க நாம பங்ஷன் முடிஞ்சபிறகு தான் போவோம் போல

இல்ல இன்னும் ஆரம்பிச்சுருக்கவே மாட்டாங்க. அண்ணன் அடித்துச் சொல்லிக் கொண்டே வந்தார்

“என்ன இவரு, இவ்வளவு கான்பிடன்டா சொல்றாரே” கொஞ்சம் குழம்பியபடியே சென்று கொண்டிருந்தோம். விழா அரங்கை அடைந்த போது அங்கே டூவிலர், போர்வீலர் என நிறைந்து கிடந்தன. எங்க வண்டிய நிறுத்துறது என்ற அண்ணன் ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு வந்தார். விழா அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆனால் அவர் சொன்னது போலவே விழா ஆரம்பமாகவே இல்லை “அண்ணே பின்னால ஒக்காரலாமா?

“ம்” என்ற அண்ணனும் நானும் இருக்கையைத் தேடி அலைந்தோம்.

அங்க ரெண்டு சீட்டு இருக்கு , “அண்ணே அங்க லேடீஸ் ஒக்காந்திருக்காங்க

அதுக்கென்ன வா, ஒக்காரலாம் என்று அண்ணன் சொல்ல இருவரும் அந்த இடத்தை நோக்கி விரைந்தோம். அங்கே ஒரு நடுத்தர வயதுப்பெண் உட்கார்ந்திருந்தாள்.

இங்க ஒக்காரலாமா?

“இல்லங்க ஆள் வாராங்க” என்றாள் அந்தப்பெண்

“இங்க”

“இங்க இல்ல” என்றாள் ஆனால் அந்த சேர் உடைந்திருந்தது .அவளின் இடம், வலம் என இரண்டு இருக்கைகள் காலியாகவே இருந்தன.

“இந்த சீட்டு, இதுல ஒக்கார முடியாது சீட்டு சரியில்ல என்றாள்.

“அண்ணன், அந்தப் பெண்ணின் அடுத்த சீட்டுக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்தார். நான் பின்னால் உட்கார்ந்தேன்.

விழா வேகமாகத் துவங்க ஆரம்பித்தது.

“பத்து, இருபது, முப்பது, நாற்பது என நிமிடங்கள் கரைந்தன. ஆனால், அந்தப் பெண் சொன்ன இருக்கைக்கு ஆள், வரவே இல்லை; வந்து கேட்கும் எல்லா ஆட்களிடமும் ஆள்வாராங்க ஆள் வாராங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். இது அருகில் இருக்கும் எல்லாருக்கும் எரிச்சலைத் தந்தது. ஆனால் அவள் இதுபற்றி எதுவும் தெரியாதது போல் உட்கார்ந்திருந்தாள். கரைந்து கொண்டே இருந்தது காலம். ஆனால் அந்த இருக்கைக்கு ஆள் வரவே இல்லை விழா தொடர்ந்து கொண்டே இருந்தது.

அந்தக் காலி இருக்கையைப் பார்த்தவர்கள், சைகையாலே கேட்டு விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

அந்தப்பெண் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. கடைசிவரை அந்த இருக்கைக்கு ஆளை உட்கார வைக்கவே இல்லை.

ஒன்று, இந்த ஆண் வர்கத்தின் மீது அவள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இல்லை ஆள் வருவாங்க என்ற அவளின் வார்த்தை பொய்யாய் போயிருக்க வேண்டும். எது எப்படியோ? அந்த இருக்கைக்கு கடைசி வரை ஆள் வரவே இல்லை.

விழா முடியப்போகும் நேரம் வந்தது.

“ஏங்க, ஆள் வர்ராங்க. ஆள் வாராங்கன்னு சொன்னீங்களே யார் வாராங்க” என்று அந்தப்பெண்ணிடம் கேட்க வேண்டும் போல இருந்தது.

“தம்பி வேணாம் “என்றார் அண்ணன்.

விழா முடியும் போது, ஒருவர் தட்டுத்தடுமாறி வந்தார். அந்தப்பெண்ணின் முகம் மலர்ந்தது. அந்தப் பெண்ணின் இருக்கைக்கு பக்கத்தில் அவர் உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்த சிறிது நொடிகளிலேயே விழா முடிந்தது. அடிப்பாவி, இவ்வளவு நேரம், அந்த சீட்டுல ஆள ஒக்கார வைக்காம ஏன் இப்படி? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் இருக்கைகளை விட்டு எழுந்து போயினர். இதுக்கா “ஆள்வர்ராங்க ஆள்வர்ராங்கன்னு சொல்லிட்டு இருந்த” என்று இரண்டு பேருக்கும் கோபம் வந்தது. அப்போது இரண்டு இருக்கைகளும் காலியாகவே இருந்தன. விழா முடிந்தது அடுத்தடுத்து மொத்த அரங்கமும் காலியாக ஆரம்பித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *